’நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இயக்கத்திற்கான தொடக்கம்’ - முதலமைச்சர் ஸ்டாலின்!
செய்தியாளர்: ரமேஷ்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சென்னையில் நடைபெற இருக்கும் கூட்டம், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இயக்கத்திற்கான தொடக்கம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற குரலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து எழுப்பிவருகிறார். இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த பாரதிய ஜனதா ஆளாத மாநிலங்களுக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்திருந்தார்.
இதையொட்டி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள முதலமைச்சர், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இயக்கத்துக்கான தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை வந்துள்ளனர். சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காலை பத்தரை மணி அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் தங்கள் கருத்துகளை கூறுவார்கள் என்றும் கூட்டத்திற்குப்பின் கூட்டு செய்தியாளர் சந்திப்பு இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.