தனி ஒருவனாய் துணிச்சலாக செயல்பட்ட போலீஸ்: ‘ஹனிமூன் பேக்கேஜ்’கொடுத்து பாராட்டு..!
தனி ஆளாய் நின்று துணிச்சலாக மொபைல் திருடர்களை தூரத்தி பிடித்த போலீசாருக்கு பாராட்டுடன் ஹனிமூன் டூர் பேக்கேஜ் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஹனுமந்த். கடந்த வியாழக்கிழமை சர்ஜாபுர் சாலை அருகே உள்ள பிக் பஜார் பக்கத்தில் இரவுநேர பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் திடீரென ‘திருடன்’ ‘ திருடன் ’ என சத்தம் கேட்டிருக்கிறது. உடனே சுதாகரித்துக் கொண்ட ஹனுமந்த், நடந்த விஷயத்தை நொடிப்பொழுதில் புரிந்து கொண்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஒருவரின் மொபைல் போனை பிடுங்கிக் கொண்டு வேகமாக சென்றதை ஹனுமந்த் கண்டு சுதாரித்தார். உடனே நொடி பொழுதும் தாமதிக்காமல் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வேகமாக கொள்ளையர்களை தூரத்திச் சென்றார் ஹனுமந்த். சுமார் 4 கி.மீ வேக பயணத்திற்கு பின் அருண் குமார் என்ற கொள்ளையனை மடக்கிப் பிடித்ததோடு அவரிடம் இருந்த மொபைல் போனையும் கைப்பற்றினார். ஆனால் அருண்குமாருடன் வந்த மற்றவர்கள் தப்பிச் சென்றுவிட்னர். யாரின் உதவியையும் எதிர்பார்க்காமல் துணிவாக சென்று கொள்ளையனை பிடித்தபோது ஹனுமந்திற்கு காயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் ஆய்வாளர் கூறும்போது, “ ஹனுமந்திற்கு இன்னும் கைகள், முட்டி என பல இடங்களில் காயம் இருக்கிறது. தைரியத்திற்கு ஹனுமந்த் ஒரு உதாரணம். தனக்கு காயம் ஏற்பட்ட போதும் பல கி.மீ தூரம் தூரத்திச் சென்று கொள்ளையனை அசால்டாக பிடித்துள்ளார். இதுபோன்று தைரியமான, துணிச்சலான போலீசாரை ஊக்கப்படுத்துவது அவசியம். அவரின் துணிச்சலே கொள்ளையன் பிடிபடுவதற்கு காரணம். துறையில் இதுபோன்று ஒரு சிலர்தான் மிகவும் தைரியத்துடன் செயல்படுகின்றனர்” என்றார். தற்போது அருண் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹனுமந்தின் துணிச்சலான செயலை பாராட்டி அவருக்கு 10,000 ரூபாய் பரிசுடன் 25,000 ரூபாய் மதிப்பிலான ஹனிமூன் பேக்கேஜ் வசதியையும் பெங்களூரு போலீசார் செய்து கொடுத்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம்தான் ஹனுமந்திற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. எனவே தாமதமாக அவர் கேரளாவிற்கு ஹனிமூன் செல்ல உள்ளார்.