‘முஸ்லிம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த சதி’ - கருத்தடை சாதனங்களுக்கு தடை விதித்த தலிபான்கள்!

‘முஸ்லிம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த சதி’ - கருத்தடை சாதனங்களுக்கு தடை விதித்த தலிபான்கள்!
‘முஸ்லிம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த சதி’ - கருத்தடை சாதனங்களுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் கருத்தடை சாதனங்களை விற்பனை செய்வதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனா்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அவர்களின் பழமைவாத கொள்கைகளால் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பெண்கள் பர்தா அணியாமல் வெளியே வரக்கூடாது; ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே வரக்கூடாது; உயர் கல்வியில் பெண்கள் சேரக்கூடாது, ஆண் மருத்துவரிடம் பெண்கள் மருத்துவம் பார்க்கக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துள்ளனர்.

இந்த சூழலில்தான், தலிபான்கள் மற்றொரு பழமைவாத கட்டுப்பாட்டை விதித்திருக்கின்றனர். அதாவது, கருத்தடை சாதனங்கள் ஏதும் ஆப்கானிஸ்தானில் இனி விற்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர் தலிபான்கள். இது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு எதையும் தலிபான் ஆட்சியாளா்கள் வெளியிடவில்லை. என்றாலும், வீடு வீடாக சென்று மருத்துவப் பணியாளா்களுக்கும், பேறுகால உதவியாளா்களுக்கும் இது தொடா்பான உத்தரவுகளை தலிபான்கள் பிறப்பித்து வருகின்றனா். கருத்தடை மாத்திரைகளை இருப்பு வைத்திருக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள தலிபான்கள், அதனை உறுதி செய்வதற்காக மருந்தகங்களில் அவ்வப்போது சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்தக் கட்டுப்பாட்டுக்கு நாட்டு மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், தலிபான்கள் வழக்கம்போல் பொருட்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக, இஸ்லாமிய மக்கள்தொகையைக் குறைக்க மேற்கத்திய நாடுகள் செய்த சதிதான் கருத்தடை சாதனங்கள் என்றும், அதை இனிமேலும் ஆப்கானிஸ்தானில் அனுமதிக்க முடியாது எனவும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சுகாதாரக் கட்டமைப்பில் பின்தங்கியுள்ள ஆப்கானிஸ்தானில் கருத்தடை சாதனங்களுக்கு தடை விதித்திருப்பது பெண்களின் பேறுகால இறப்புகளை அதிகரிக்கச் செய்யும் என பல்வேறு உலக நாடுகள் எச்சரித்துள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com