“ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில்” - காங்கிரஸ் குரல்

“ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில்” - காங்கிரஸ் குரல்
“ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில்” - காங்கிரஸ் குரல்

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளரும் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதனிடையே அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு பாஜக மற்றும் இந்து அமைப்பினரிடையே ஓங்கி ஒலித்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளரும் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சருமான ஹரிஷ் ராவத் டேராடூனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ராமர் கோயில் கட்டுவோம் என பாஜக ஒவ்வொரு தேர்தலின்போதும் கூறி வருகிறது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதை மறந்து விடுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியில் உள்ளது. இதற்காக என்ன செய்தது?
 

ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் மத உணர்வுகளை காங்கிரஸ் கட்சி புரிந்து கொள்கிறது. காங்கிரஸ் ஒற்றுமையை நம்புகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என நாங்கள் நீண்ட காலமாகவே கூறி வருகிறோம். 

இத்தனை ஆண்டுகள் ஆட்சியிலுள்ள பாஜக அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக ராமர் கோயில் கட்டுவோம். அதற்கான முழு முயற்சியையும் மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தார். 

மேலும் “பிரதமர் மோடி மட்டுமே இந்தியாவில் தேசியவாதி என்ற பிம்பத்தை பாஜக உருவாக்கி வருகிறது. அதை நான் வன்மையாக எதிர்க்கிறேன். நாம் எல்லோரும் தேசியவாதிதான். இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் தேசியவாதிதான்” என ஹரிஷ் ராவத் குறிப்பிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com