ராகுலின் இந்திய வருகைக்காக காத்திருப்பு.. கூட்டணி உறுதியாகுமா..?
காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி இந்தியா திரும்பியவுடன், காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி உறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி பெரும் சவாலாக காணப்படுகிறார். இந்நிலையில் ஏற்கனவே, உட்கட்சி பூசலால் சிக்கி தவித்து வரும் ஆளும் சமாஜ்வாதி கட்சியும்- காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கும் எனத் தெரிகிறது.
தற்போது வெளிநாடு சென்றுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி வரும் 8-ஆம் தேதி இந்தியா திரும்புகிறார். இதன் பின் கூட்டணி குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகையில், முதலமைச்சர் அகிலேஷ்ய யாதவ் வரும் ஜனவரி 9-ம் தேதி டெல்லி செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, அங்கு கூட்டணி குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அவரது, சகோதரி பிரியங்கா காந்தியுடன் நுட்பமாக ஆலோசனை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இருதரப்பிற்கும் சாதகமான முடிவு எட்டப்பட்டால், கூட்டணி குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம், இரண்டாவது வாரத்தில் பிரியங்கா காந்தியும், அகிலேஷ் யாதவ்வும் ஆலோசனை நடத்தினர். அப்போது கூட்டணி குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 11-ல் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி 7 கட்டங்களாக மார்ச் 8-ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது.