சச்சின் பைலட் ஆதரவு 2 எம்.எல்.ஏக்களின் இடைநீக்கம் ரத்து - இணையும் மனங்கள்!!
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பன்வர் லால் சர்மா மற்றும் விஸ்வேந்திர சிங் ஆகியோரின் இடைநீக்கத்தை காங்கிரஸ் கட்சி ரத்து செய்துள்ளது.
இன்று மாலை தொடங்கியுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. அங்கு தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டை சந்திக்கவுள்ளார் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.
ராஜஸ்தான் சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு ஒரு நாள் முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்துகிறது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை சந்தித்த பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டார் சச்சின் பைலட். அவரது குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளது காங்கிரஸ் தரப்பு.