டெல்லியில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் எம்பிக்கள் : ராகுலை சந்திக்க தீவிரம்
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் நிர்வாகிகளை சந்திக்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகின.
தமிழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம், பஞ்சாப், கேரளா மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முன் வந்தார். ஆனால் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதது அடுத்து, அவரே தலைவராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம், முதலமைச்சர்கள் அசோக் கெலாட் மற்றும் கமல்நாத் உள்ளிட்டோர் தங்களது மகன்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, ராகுலை நிர்ப்பந்தம் செய்ததாகவும், இதுபோல பல்வேறு இடங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் யோசனை தவறாக சென்றதே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அவ்வளவு பெரிய படுதோல்வியை சந்திக்க காரணம் என டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
இதனால் ராகுல்காந்தி கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.பி.கள் தலைநகர் டெல்லியில் முகாமிட்டு ராகுல்காந்தியை சந்திக்க காத்திருக்கின்றனர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி ராகுல் காந்தியை சந்திக்க நேரம் ஒதுக்க தொடர்ந்து இரண்டு நாட்களாக டெல்லியில் தங்கி முயற்சித்து வருகிறார்.ஆனால் ராகுல் காந்தி இன்னும் நேரம் ஒதுக்காமல் இருக்கிறார். தமிழக எம்பிக்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.