இந்தியாவை ஊழல் மற்றும் பழிவாங்கும் போக்கிலிருந்து விடுவிக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் வெற்றி, நாட்டின் வெற்றியாக இருக்கும் என்று கூறினார். காங்கிரஸ் என்பது வெறும் அரசியல் பதமல்ல என்றும் அது ஒரு இயக்கம் என்றும் குறிப்பிட்டார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் சிக்மங்களூரில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி இந்திய அரசியலை மாற்றிக் காட்டியதாகவும், தற்போது அதே போன்ற ஒரு சாதனையை தரவேண்டியிருப்பதாகவும் கூறினார். மன்மோகன் சிங் அரசில் பொருளாதார வளர்ச்சி அதிகபட்சமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை பலவீனப்படுத்தி கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
கடந்த 4 ஆண்டுகளில் தலைக்கனம் கொண்ட மத்திய அரசு காங்கிரஸ் கட்சியை ஒழிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் ஆனால் காங்கிரஸ் யார் முன்னும் தலை குனிந்ததில்லை என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடி மற்றும் அவருடன் இருப்பவர்களின் மோசடியையும், ஊழலையும் ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருவதாக சோனியா காந்தி தெரிவித்தார்.