கடைசி நேரத்தில் விமானத்துக்கு அனுமதி மறுப்பு: மஜத புகார்
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா எம்எல்ஏக்களை கேரளாவிற்கு அழைத்துச் செல்ல வாடகைக்கு அமர்த்திய விமானங்களுக்கு விமானப் போக்குவரத்துத்துறை கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்துவிட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாரதிய ஜனதாவின் குதிரை பேரத்திலிருந்து தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கும் முயற்சிக்கு விமானப் போக்குவரத்துத்துறையும் முட்டுக்கட்டைபோடுவதாக மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஒருவர் பிடிஐ செய்தி் நிறுவனத்துக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால், இந்தியாவுக்குள் வாடகைக்கு அமர்த்தப்படும் விமானங்களை இயக்க தங்களது அனுமதி தேவையில்லை என்று விமானப் போக்குவரத்துத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பெங்களூருவில் ஒரு விடுதியில் தங்கியிருந்த மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும், சொகுசு விடுதியிலிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களும் நேற்றிரவு பேருந்துகளில் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் புதுச்சேரி அல்லது கொச்சி அல்லது ஐதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், இதுபற்றி உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனிடையே, தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதால், பாரதிய ஜனதாவினர் தங்களைச் சந்தித்து பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் கூறியுள்ளனர்.