சுருங்கியது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து, இந்தியாவில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்து ஆக குறைந்துவிட்டது.
கர்நாடக சட்டப்பேரவையில் 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பின்னர் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் மட்டுமே பதிவாகின. எதிராக 105 வாக்குகள் பதிவாகின. இதனால் பெரும்பான்மையை இழந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதனால் முதலமைச்சர் பதவியை குமாரசாமி இழந்தார். குமாரசாமியின் பதவி இழப்பால் காங்கிரஸ் மேலும் சரிந்துள்ளது.
இந்தியாவில், சில மாநிலங்களைத் தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பலம் தற்போது சுருங்கிவிட்டது. இதுதவிர மக்களவைத் தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால், மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தும் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. இதுபோன்ற சூழலில், தென்னிந்தியாவில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வந்தது.
கர்நாடகாவில் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில்தான் தற்போது காங்கிரஸின் ஆட்சி உள்ளது. அதேவேளையில், தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும்தான் பாரதிய ஜனதா கட்சிக்கு செல்வாக்கு உள்ளது.

