“மக்களவை தலைவராக ரஞ்சன் சவுத்ரி தேர்வு” - காங். அறிவிப்பு
மக்களவை காங்கிரஸ் தலைவர் பொறுப்பை மேற்கு வங்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் ரஞ்சன் சவுத்ரி வகிப்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
17ஆவது மக்களவையில் காங்கிரஸ் கட்சி பாஜகவிற்கு அடுத்த தனிபெறும் கட்சியாக உருவேடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி மக்களவையில் 52 எம்பிக்களை கொண்டுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக யார் இருப்பார் என்ற கேள்வி எழத்தொடங்கியது. ஏனென்றால் கடந்த முறை மக்களவை காங்கிரஸ் தலைவராக இருந்த மல்லிக்கார்ஜூன கார்கே இம்முறை தேர்தலில் தோல்வியடைந்ததால் மக்களவை எம்பியாக இல்லை.
இதுதொடர்பாக இன்று காலை ஆலோசனைக் கூட்டம் நீண்ட நேரமாக நடைபெற்றது. கூட்டத்தில் சோனியா காந்தி கலந்து கொண்டார். இதன்பின்னர் மக்களவைக்கு காங்கிரஸ் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில், ரஞ்சன் சவுத்ரி கட்சியின் மக்களவைத் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ரஞ்சன் சவுத்ரி, கேரளாவின் கே. சுரேஷ், கட்சியின் செய்தி தொடர்பாளர் மணிஷ் திவாரி, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோரின் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ரஞ்சன் சவுத்ரி 5 -வது முறையாக மக்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். அவையில் நீண்ட காலம் அவருக்கு நல்ல அனுபவம் உண்டு என்ற அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.