
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பெயரில் டெல்லியில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் கட்டப்பட்டது. கடந்த ஜூன் மாதம் என்.எம்.எம்.எல். சொசைட்டியின் துணைத் தலைவரான பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், வளாகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரானது, 'பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்' என அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் இந்தப் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் கடுமையாக கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தியும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "நேரு, அவர் செய்த செயல்களால் அறியப்படுவார்; வெறும் பெயருக்கு அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சிறுமைத்தனமான, சர்வாதிகார அணுகுமுறையைக் காட்டுகிறது” எனக் கூறியிருதார். அதுபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “நேருவையும் அவரது பாரம்பரியத்தையும் அழிப்பது மட்டுமே மோடி அரசின் செயல்திட்டம்” என கடுமையாகச் சாடி இருந்தார்.