எம்பிக்களின் நிதியை நிறுத்துவது ஏற்புடையதல்ல : கார்த்தி சிதம்பரம், சசி தரூர் எதிர்ப்பு

எம்பிக்களின் நிதியை நிறுத்துவது ஏற்புடையதல்ல : கார்த்தி சிதம்பரம், சசி தரூர் எதிர்ப்பு

எம்பிக்களின் நிதியை நிறுத்துவது ஏற்புடையதல்ல : கார்த்தி சிதம்பரம், சசி தரூர் எதிர்ப்பு
Published on

நாடாளுமன்ற எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பதை ஏற்க முடியாது என்று சிவகங்கை மக்களவை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “அரசாங்கம் நிதிகளைப் பெற விரும்பினால் அதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால், எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இது நாடாளுமன்ற எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு பணிகளை நிறுத்தும் தீங்கான நடவடிக்கை ஆகும். இது ஜனாதிபதி ஆட்சியை மறைமுகமாக நடமுறைப்படுத்துவது போன்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கொரோனா எதிரொலியாக பிரதமர் உள்பட எம்பிக்களின் சம்பளத்தில் 30 சதவிதம் குறைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியிருந்தார்.

குடியரசுத்தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஆளுநர்கள் ஆகியோரின் சம்பளத்திலும் 30 சதவிதம் பிடிக்கப்படும் என்றும் ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்பிக்களின் சம்பளத்திலும் 30 சதவிதம் பிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளக் குறைப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. சம்பள குறைப்பு, தொகுதி நிதி நிறுத்தம் ஆகியவற்றின் மூலம் அரசுக்கு ரூ.7900 கோடி மிச்சமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “எம்.பிக்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை மத்திய அரசு குறைத்தது வரவேற்புக்குரியது. நாடு முழுவதும் உள்ள மக்கள் துன்பத்தில் இருக்கையில் இந்த நடவடிக்கை நம்முடைய ஒற்றுமையை காட்டும் நல்ல வழி. அதேசமயம் தொகுதிகளின் எம்.பிக்களின் இரண்டு வருட நிதியை ஒன்றாக சேர்த்து மத்திய அரசு கையாளுவது சிக்கலை உண்டாக்கும்.

ஆனால் எம்.பிக்களின் நிதியை கொரோனா பாதிப்பிற்கு பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு அதனை ஒப்படைக்கலாம். நான் எனது நிதியை திருவனந்தபுரம் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை வாங்கிக்கொடுக்க உதவுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com