கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!

கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!

கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரி, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளது.

கோவா சட்டப்பேரவைக்கு 40 தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருந்தாலும் பெரும்பான்மை இல்லை. ஆனால், 13 இடங்களைப் பெற்ற பாஜக, தலா 3 இடங்களில் வென்ற மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்ட் கட்சி, 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

பாஜக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள், மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக வந்தால் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க, ஆதரவு தருவோம் என்றன. இதனால், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி வகித்து வந்த மனோகர் பாரிக்கர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் ஆனார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி அப்போது சர்ச்சையை கிளப்பியது. தாங்கள் தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்குமாறு ஆளுநர் மிரிதுலா சின்ஹாவிடம் காங்கிரஸ் கட்சி, கடந்த செப்டம்பரில் வலியுறுத்தியது. ஆனால், ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சுபாஷ் ஷிரோத்கர் மற்றும் தயானந்த் சோப்தே பாஜகவில் இணைந்தனர். அதே போல், கோவா துணை சபாநாயகர் பிரான்சிஸ் சவுஸா உயிரிழந்தார். இதனால், கோவா சட்டசபையின் பலம் 37 ஆக குறைந்தது. பிரான்சிஸ் சவுஸா மறைவை அடுத்து காங்கிரஸ் கட்சி கோவாவில் ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரியது. 

இந்நிலையில் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இதனால் கோவா சட்டப்பேர வையின் பலம் 36 ஆக குறைந்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்கள் உள்ளன. பாஜகவிடம் 12 இடங்கள் உள்ளன. 

தற்போது, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். 

இதுபற்றி கோவா மாநில காங்கிரஸ் தலைவர், சந்திரகாந்த் கவ்லேகர் கூறும்போது, ‘’கோவா முதலமைச்சர் மரணம் வருத்தமளிக்கிறது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையாக உள்ள தங்களது கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அழைத்தால் சட்டப்பேரவையில் எங்கள் பலத்தை நிரூபிப்போம்’’ என்றார்.

இதற்கிடையே, மறைந்த பாரிக்கருக்குப் பதில் புதிய முதலமைச்சரை இன்று 3 மணிக்குள் தேர்ந்தெடுத்துவிடுவோம் என்று மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com