தங்க பிஸ்கட், ஹெராயின் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது! பஞ்சாப்பில் பரபரப்பு - பின்னணி என்ன?

பஞ்சாப்பில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சுக்பால் சிங் கைரா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுக்பால் சிங் கைரா
சுக்பால் சிங் கைராFile Image

பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்றவர் சுக்பால் சிங் கைரா. இவர் முதல்வர் பகவத்மான் தலைமையில் நடைபெறும் ஆம் ஆத்மி அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் அவர். பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள சுக்பால் சிங் கைரா வீட்டிற்குச் சென்ற போலீசார், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் உங்களைக் கைது செய்ய வந்துள்ளோம் எனக் கூறியுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அவர் கைது வாரண்டை காட்டும்படி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் அனைத்தும் சுக்பால் சிங் கைராவின் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இவரது கைது குறித்து காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியினரைப் பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் எனக் குற்றம் சாட்டினர்.

“8 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்குகளுக்கு தற்போது நடவடிக்கை எடுக்க என்ன காரணம்?” எனப் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சுக்பால் சிங் கைரா கைது
சுக்பால் சிங் கைரா கைது

காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டை ஆம்ஆத்மி கட்சி முற்றிலுமாக மறுத்துள்ளது. “எம்.எல்.ஏ கைது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது, இதில் பழி வாங்கும் எண்ணம் இல்லை” எனக் கூறியுள்ளது.

சுக்பால் சிங் கைரா கைது வழக்கின் பின்னணி?

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த 2012 ஆம் ஆண்டேவும் சுக்பால் சிங் கைரா கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அதன்பின் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜலாலாபாத் பகுதியில் தங்க பிஸ்கட் ஹெராயின், துப்பாக்கி உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் சுக்பால் சிங் கைராவின் உதவியாளர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின் சுக்பால் சிங் கைராவையும் இந்த வழக்கில் குற்றவாளியாக போலீசார் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இருப்பினும் 2017 ஆம் ஆண்டு சுக்பால் சிங் கைராவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்தது. இப்படியான சூழலில்தான் இப்போது சுக்பால் சிங் கைரா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com