
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரை சேர்ந்த பட்டியலின நபர் ஒருவர், காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனா மற்றும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 51 வயதான அந்நபர் காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:- ''கடந்த ஜூன் 30ஆம் தேதி நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, சில போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்னை தாக்கி ஒரு அறைக்கு இழுத்துச் சென்றனர். அங்கே துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) சிவகுமார் பரத்வாஜ் என்னை தாக்கியதுடன் என் மீது சிறுநீர் கழித்தார். மேலும் அந்த டிஎஸ்பி, காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனாவின் பெயரை சொல்லி, "அவர் இந்த பகுதியின் ராஜா" என்றபடி என்னை அதட்டினார். மேலும் எம்எல்ஏ கோபால் மீனா தனது காலணிகளை நக்கும்படி என்னை கட்டாயப்படுத்தினார்.
எம்எல்ஏ கோபால் மீனாவும், போலீசாரும் எனது செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு இங்கு நடந்ததை வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினர். இதுகுறித்து புகார் அளிக்க காவல்துறையினரை அணுகியபோது அவர்கள் புகாரினை ஏற்க மறுத்துவிட்டனர். சில போலீஸ் உயரதிகாரிகளிடம் முறையிட்டேன். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்று அந்த புகாரில் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபரின் புகாரை ஏற்க காவல்துறையினர் மறுத்துவிட்ட நிலையில் அவர் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். அதன்பிறகே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும்படி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரில் எம்எல்ஏ கோபால் மீனா மற்றும் டிஎஸ்பி சிவகுமார் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புகார் அளிக்கப்பட்டதில் இருந்து தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், ஜூன் 30 அன்று நடந்த சம்பவம் குறித்து, பயத்தின் காரணமாக ஜூலை 27 அன்றே புகார் அளித்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து தற்போது சிபி-சிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கடந்த மாதம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பழங்குடியின இளைஞா் மீது பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா சிறுநீா் கழித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது ராஜஸ்தானில் பட்டியலின நபரை காலணியை நக்க வைத்ததுடன் அவர்மீது சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.