மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது ஏன்?

மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது ஏன்?
மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்தது ஏன்?

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி மிசோ தேசிய முன்னணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 

மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறி நிலவும் என்றே பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் கருத்துகணிப்புகளை பொய்யாக்கி மிசோ தேசிய முன்னணி, ஆட்சியை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்ததுடன், 10 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த லால் தன்வாலா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைய முக்கிய காரணங்களில் ஒன்று அக்கட்சியில் நிலவிய குழப்பம்தான் என அக்கட்சியினர் கூறுகின்றனர். பழைய எம்எல்ஏக்கள் பலரை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க அக்கட்சி முடிவு செய்தது கட்சிக்கு எதிராக போய்விட்டதாக என்று கூறுகின்றனர். தேர்தலுக்கு முன்னர் உள்துறை அமைச்சராக இருந்த லால் ஜிர்லியானா உள்ளிட்டோர் ராஜினாமா செய்ததும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்குகள் திரும்பக் காரணமாக இருந்ததாக கூறுகின்றனர் அம்மாநில அரசியல் நோக்கர்கள். 

தேர்தலுக்கு முன் ஐந்து எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறியதும் பின்னடைவாக அமைந்தது. ஆளும் கட்சிக்கு எதிராக எழுந்த எதிர்ப்பலையும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம். காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் அந்தக் கட்சிக்கு எதிராக அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த 2014ம் ஆண்டு மிசோரம் மாநிலத்தில் முழு மதுவிலக்கை தளர்த்தி மதுவிற்பனையை அனுமதித்தது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்ததாக எதிர்க்கட்சிகள் பரப்புரை மேற்கொண்டன. முழு மதுவிலக்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என மிசோ தேசிய முன்னணி வாக்குறுதி அளித்திருந்தது. இதுவும் காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com