கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்... ஆளும் கூட்டணிக்குப் பின்னடைவு; காங்கிரஸ் கூட்டணி முன்னிலை.!
கேரளா முழுவதும் மொத்தம் உள்ள 1,200 உள்ளாட்சி அமைப்புகளில் 1,199 அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதியம் 1.30 மணி நிலவரப்படி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதன்படி, மொத்தமுள்ள 941 ஊராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 494 இடங்களைப் பிடித்துத் தெளிவான முன்னிலை வகிக்கிறது. ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி 348 இடங்களை மட்டுமே பெற்று பின்னடைவில் உள்ளது.152 பிளாக் பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 81 இடங்களைப் பிடித்து முன்னிலை வகிக்கிறது. சிபிஎம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) 63 இடங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.14 மாவட்டப் பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 7 இடங்களிலும், சிபிஎம் தலைமையிலான இடதுசாரி முன்னணி (LDF) 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 87 நகராட்சிகளில் UDF 54 இடங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது. LDF 28 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.
கேரள உள்ளாட்சித் தேர்தலில், இடது சாரி ஐக்கிய முன்னணிக் கூட்டணிக்கும், ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவினாலும், இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக, தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதல் முறையாகப் பாஜக கூட்டணி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, ஆளும் இடதுசாரி முன்னணிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஒரு மாபெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. இந்த முடிவுகள், வரவிருக்கும் கேரளச் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு பலமான முன்னோட்டமாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

