கை ஓங்கிய காங்கிரஸ்... பின்னடைவை சந்தித்த பாரதிய ஜனதா - இடைத்தேர்தல் முடிவுகள் ஓர் பார்வை

கை ஓங்கிய காங்கிரஸ்... பின்னடைவை சந்தித்த பாரதிய ஜனதா - இடைத்தேர்தல் முடிவுகள் ஓர் பார்வை
கை ஓங்கிய காங்கிரஸ்... பின்னடைவை சந்தித்த பாரதிய ஜனதா - இடைத்தேர்தல் முடிவுகள் ஓர் பார்வை

நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அசாம், மத்தியப்பிரதேச மாநிலங்களைத் தவிர மற்ற தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியுள்ளது.

தாத்ரா யூனியன் பிரதேசம்: நாடெங்கும் 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 3 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த 30ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

விரைவில் உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. அதிலும் மேற்குவங்க மாநிலத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை கூட்டி இருந்தன. இந்த நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதில் இரண்டு இடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குபெற்று திரிணாமுல் வேட்பாளர்கள் வெற்றியை பதிவு செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் இமாச்சல் பிரதேசத்தில் 3 சட்டமன்றம் மற்றும் மண்டி மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றில் பா.ஜ.க.வும், மற்றொன்றில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவியுள்ளது. அசாம் மாநிலத்தில் 5 சட்டமன்ற இடங்களையும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. மத்திய பிரதேசத்தில் மூன்றில் 2 சட்டமன்றத்தொகுதிகளையும், ஒரு மக்களவை தொகுதியையும் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் அரியானா, பீகார், ஆந்திரா, தெலங்கானா, நாகலாந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் ஓங்கி இருந்ததை காணமுடிந்தது. தாத்ரா யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் சிவசேனா முன்னணியில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com