\
Congress,india alliance leaders rush to Arivalayam
Congress,india alliance leaders rush to ArivalayamANI

அறிவாலயத்துக்கு விரையும் காங். தலைவர்கள்: ஸ்டாலினை உற்றுநோக்கும் இந்தியா! திமுக ஏன் முக்கியம்?

திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில முதல்வர்கள், இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னை வருகை தருகின்றனர்.
Published on: 
Summary

தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க திமுகவின் முடிவு முக்கியமாக மாறியுள்ள நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் ஸ்டாலினை சந்திக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திமுகவின் வாக்குகள் மசோதா நிறைவேறுவதற்கும் தோல்வியடைவதற்கும் தீர்மானமாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தொகுதி மறுவரையறை விவகாரம் தற்போது இந்திய அளவில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. தொகுதி மறுவரையறை மேற்கொள்ள அரசியல் சாசனம் திருத்தப்படவேண்டும் என்பதால், இந்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. ஆனால் நாடாளுமன்றத்தில் கடந்த முறை இந்த மசோதாவை பாஜக கொண்டுவந்தபோது இந்தியா கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் அதற்கு எதிராக வாக்களித்து அந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் செய்தன.

இதனிடையே தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக கூட்டணியில் இணைந்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த திமுக இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

இந்த சூழலில் பாஜக தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளது. இந்த மசோதாவில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத தொகுதிகளை உயர்த்துவதாக பாஜக திருத்தும் கொண்டுவந்தது. இதனால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் குறையாது என்று கூறி தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்தது. மேலும் தாங்கள் முன்னர் கோரிய Fair Delimitation என்பதை பாஜக ஏற்றுக்கொண்டதால் இந்த ஆதரவை தெரிவிப்பதாகவும் தெரிவித்திருந்தது.

பாஜகவின் இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தில் எதிர்க்கவுள்ளதாக அறிவித்த நிலையில், திமுகவின் இந்த நிலைப்பாடு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற மொத்தம் 360 இடங்கள் தேவை. இதில் பாஜக கூட்டணி வசம் 320 இடங்கள் உள்ள நிலையில், சுயேச்சைகள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பாஜக ஆதரவு எம்.பிக்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 8 எம்.பிக்கள் ஆதரவு என தற்போது பாஜக கூட்டணிக்கு 335 இடங்கள் உள்ளன.

இந்த சூழலில் திமுகவின் 22 எம்.பிக்கள் ஆதரவு காரணமாக பாஜக கூட்டணிக்கு 357 இடங்கள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் 3 எம்.பி.க்கள் வாக்கெடுப்பை ஆதரித்தாலே இந்த மசோதா நிறைவேறும் சூழல் உள்ளது. அதே போல மாநிலங்களவையில் மசோதா நிறைவேற மொத்தம் 163 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணிகள் வசம் 154 இடங்கள் உள்ளன. இதனால் திமுகவின் 8 இடங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.

இப்படி திமுக இந்த மசோதாவை ஆதரித்தால் மசோதா நிறைவேறும், திமுக எதிர்த்தால் மசோதா தோல்வியடையும் என்பதால் திமுகவின் வாக்குகள் இந்தியா கூட்டணி, பாஜக கூட்டணி என இரு தரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.

இந்த சூழலில் திமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக அக்கட்சி உறுப்பினர்களை வாக்களிக்க வைக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரசின் கேரளா, கர்நாடக, ஆந்திர மாநில முதல்வர்கள் அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதே போல இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களான சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் எம். ஏ. பேபி, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தரவுள்ளனர். இதனால் இந்தியாவே திமுக என்ன முடிவெடுக்க போகிறது என்பதை உற்றுநோக்கி வருகிறது.

Congress,india alliance leaders rush to Arivalayam
2 தொகுதிக்கு இடைத்தேர்தல், 3 தொகுதிக்கு NO.. எந்தெந்த தொகுதிகள் தெரியுமா? உயர்நீதிமன்றம் தீர்ப்பு!