அவதூறு வழக்கு: ராகுல் காந்தி ஜாமினில் விடுவிப்பு
அவதூறு வழக்கில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியில், அப்போது துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி, இந்த கொலை தொடர்பாக பாஜகவையும் ஆர்.எஸ்.எஸ்.சையும் தொடர்புபடுத்தி பேசினார். ’’பாஜக, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்களின் குரல் நசுக்கப்படுகிறது. அவர்கள் தாக்கப் படுகிறார்கள். கொலை செய்யப்படுகின்றனர்’’ என்று தெரிவித்திருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் இதே கருத்தை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் திரித்துமன் ஜோஷி என்பவர், ராகுல் காந்தி மீதும், சீதாராம் யெச்சூரி மீதும் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கும் சீதாராம் யெச்சூரிக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் மும்பை நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர். ராகுல் காந்தி வருகையை ஓட்டி, காங்கிரஸ் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரளாக கூடியிருந்தனர்.
இந்நிலையில் நேரில் ஆஜராகியிருந்த ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் ரூ.15 ஆயிரம் செலுத்தி ஜாமினில் செல்ல உத்தரவிட்டது.