”மோடியை வீழ்த்த பிரியங்காவை எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளரா அறிவிக்கணும்” - ஆச்சார்யா பிரமோத்

”வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றால், பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என சமூக ஆர்வலரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஆச்சார்யா பிரமோத் கூறியுள்ளார்.
Priyanka Gandhi, Acharya Pramod
Priyanka Gandhi, Acharya Pramodtwitter pages

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. இந்த வெற்றி, நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸின் வெற்றி தலைமைக்கு மட்டுமல்லாது, தொண்டர்களுக்கும் புத்துணர்வைத் தந்துள்ளது. இதனால், இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் சில மாநில சட்டசபை தேர்தல்களிலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் உற்சாகமாய்ப் பணியாற்ற மேலும் பல உத்திகளுடன் காங்கிரஸ் கட்சி களமிறங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில், காங்கிரஸின் இந்த வெற்றிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரமும் ஒன்றாகப் பேசப்படுகிறது. தற்போது காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருப்பது பிரியங்காவுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது. இந்த வெற்றியை அவர் கொண்டாடியும் வருகிறார்.

இந்த நிலையில், ”வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்றால், பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என சமூக ஆர்வலரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஆச்சார்யா பிரமோத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், “பிரதமர் மோடியை வீழ்த்தக்கூடிய ஆளுமையும், மக்களை ஈர்க்கக்கூடிய வசீகரமும் கொண்ட ஒரே தலைவர் பிரியங்கா காந்திதான். மக்கள் ஏற்றுக்கொள்ளூம், பிரபலமான, நம்பகத்தன்மை மிக்க பிரியங்காவை, பிரதமராக முன்னிறுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளில் பிரியங்காவவிட சக்திமிக்க தலைவர் வேறு யாரும் இல்லை. எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து பிரியங்காவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com