மன்கீ பாத்தை கிண்டலடிக்கும் காங்கிரஸ் கார்ட்டூன்
மன்கீ பாத் மோடியின் உரையை கிண்டலடிக்கும் விதமாக காங்கிரஸ் ஜன்கீ பாத் என்று காமெடி கார்ட்டூன் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி எளிய மக்களிடம் உரையாடும் நோக்கில் மன்கீ பாத் என்று தொடர்ந்து பேசி வருகிறார். மன்கீ பாத் என்றால் மனதின் குரல் என்று அர்த்தம். மனதில் உள்ளதை பேசுகிறேன் என பொருள்படும் விதத்தில் இந்தத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
உயர் மதிப்பு நோட்டுகளை திரும்ப பெற்றது, விவசாயிகள் பிரச்னை, தொடர்ந்து அதிகரித்து வரும் பண வீக்க விவகாரம் என பல விவகாரத்தை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் தீர்மானித்திருந்தன. தேர்தல் பிரச்சாரத்தில் மோடி மும்முரமாக இருப்பதால் அவர் கூட்டத்தொடரை கூட்ட மறுக்கிறார் என்று ராகுல் புகார் கூறியிருந்தார்.
இதை எடுத்துக்காட்டும் நோக்கில் காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் நாடாளுமன்றம் போர்வை போர்த்திக் கொண்டு உறங்குவதை போல சித்திரிக்கப்பட்டுள்ளது. மேலும் திரும்பத் திரும்ப உறங்க இந்தப் பட்டனை அழுத்தவும் என்று கேலி செய்யப்பட்டுள்ளது. மன்கீ பாத்திற்கு பதிலடியாக அந்த கார்ட்டூனுக்கு ஜன்கீ பாத் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஜனங்களின் குரல். தற்போது தேர்தல் நடந்து கொண்டிருப்பதால் யாரும் இடையூறு செய்ய வேண்டாம் என்று கார்ட்டூன் பேசுகிறது.