சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரி கணக்கெடுப்பு கோப்புப்படம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எப்போது? புதிய அரசுக்கு உருவாகும் நெருக்கடி!

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முடிந்த மக்களவைத் தேர்தலில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்பது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முதன்மை முழக்கமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் வலைத்தளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், "2021 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில், பிரதமர் மோடி அதை செய்யவில்லை.

ஒருமுறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தவறிவிட்டால், அதனால் 14 கோடி இந்தியர்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பலன்களைப் பெற இயலாமல் போய்விடும். நமது நாட்டில் எப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தெரிவிக்கவேண்டும். ஓபிசி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள சமூகங்கள் தொடர்பான விவரங்களையும் கணக்கெடுப்பு மூலம் வெளியிடவேண்டும். இதைச் செய்தால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்டமுடியும்" என தெரிவித்துள்ளார்.

இதேபோல், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ”பிரதமர் மோடியிடமிருந்து இந்த நாடு, குறிப்பாக தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு
மத்திய அமைச்சர் பதவி| அதிருப்தியில் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே

மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைகளில் மாநில ஒதுக்கீடு வழங்குதல், நீட் விலக்கு, மாநில உரிமைகளை அதிகரித்தல் ஆகிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது. இவற்றை மத்திய அரசு செய்யும் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளமும், சாதிவாரி கணக்கெடுப்பின் தேவை குறித்து சில நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தது. அனைத்து தரப்பில் இருந்தும் குரல் எழத் தொடங்கி இருப்பது, புதிய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com