ஆம் ஆத்மி கூட்டணிக்கு நோ - வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்
ஏழு மக்களவைத் தொகுதிகள் கொண்ட டெல்லி மாநிலத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் பெயரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
டெல்லி மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. அதன்படி, புது டெல்லி தொகுதியில் முன்னாள் அமைச்சர் அஜய் மாக்கென் போட்டியிடுகிறார். வட கிழக்கு டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் களமிறங்க உள்ளார். சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்திருந்த நிலையில் அத்தொகுதி ஜெ.பி.அகர்வால் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இன்னும் தெற்கு டெல்லி தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. டெல்லியில் வரும் 12ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் முடிகிறது. இந்த சூழலில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

