"நண்பர்களுக்காக எதையும் செய்பவர் மோடி": விமர்சித்த காங்கிரஸ்
அதானி விவகாரத்தை சுட்டிக்காட்டி, நண்பர்களுக்காக எதையும் செய்பவர் பிரதமர் மோடி என கேலிச் சித்திரம் வெளியிட்டு காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
அதானி குழுமம் மீதான முறைகேடு புகாரில் 100 சம்மன்கள் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “18 மாதங்களைக் கடந்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பங்குச்சந்தை விதிகளை அதானி குழுமம் மீறியதா என்ற விசாரணை கூட முழுமை பெறாமல் இருக்கிறது. தேர்தல் பரப்புரையில் அதானி விவகாரத்தை பிரதமர் மோடி தவிர்ப்பதற்கு ஏதுவாக, விசாரணையை செபி காலம் தாழ்த்தியது” என குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், “செபியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதால், இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், அதானியை மோடி தனது தோளில் தாங்குவது போன்ற கேலிச் சித்திரத்தை வெளியிட்டு, நண்பர்களுக்காக எதையும் செய்பவர் என விமர்சித்துள்ளது. அது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.