காங்கிரஸ் கோட்டை அமேதியை ஸ்மிருதி இரானி கைப்பற்றியது எப்படி?

காங்கிரஸ் கோட்டை அமேதியை ஸ்மிருதி இரானி கைப்பற்றியது எப்படி?
காங்கிரஸ் கோட்டை அமேதியை ஸ்மிருதி இரானி கைப்பற்றியது எப்படி?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, அவரது குடும்பத்தின் பாரம்பரியக் கோட்டையான அமேதியில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி வென்றுள்ளார். அது எப்படி சாத்தியமானது?

உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் 2004 ஆம் ஆண்டு முதன்முறையாக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதையடுத்து 2009 மற்றும் 20‌14 மக்களவைத் தேர்தலிலும் தொடர்ந்து அவரே வெற்றி பெற்றார். இதில் 2014 தேர்தலில் அவரை எதிர்த்து, டிவி சீரியல் நடிகையான ஸ்மிருதி இரானியை பாரதிய ஜனதா நிறுத்தியது. 

முந்தைய தேர்தல்களில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த ராகுல் காந்திக்கு, 2014 தேர்தலிலேயே கடும் போட்டி கொடுத்தார் ஸ்மிருதி இரானி. எனினும் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். தோல்வி கண்ட ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக்கப்பட்டு, மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். எனினும், மீண்டும் 2019 தேர்தலில் அமேதியின் வேட்பாளர் அவரேதான் என பாரதிய ஜனதா தலைமை உறுதி செய்திருந்தது. 

இதையடுத்து, தோல்வி கண்டிருந்தாலும் அமேதி தொகுதிக்கு அடிக்கடி சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் ஸ்மிருதி இரானி. மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சமூக நலத் திட்டங்களின் செயல்பாட்டை உறுதி செய்தார். தேசிய கட்சியின் தலைவர் என்பதாலும், தங்களது பாரம்பரிய தொகுதி என்பதாலும் அடிக்கடி அமேதிக்கு ராகுல் காந்தி வராத சூழலை, நன்றாக பயன்படுத்திக் கொண்டார் ஸ்மிருதி இரா‌னி. மேலும், வயநாடு தொகுதியிலும் போட்டியிட ராகுல் எடுத்த முடிவை தனக்கு சாதகமாக்கிய இரானி, வயநாட்டில் வென்றால் அமேதியை ராகுல் கைவிடுவார் என வாக்காளர்களிடம் தெரிவித்தார். 

அமேதி தொகுதிக்கு உட்பட்ட கவுரிகஞ்ச் பகுதியில் வாடகை வீட்டில் தங்கிய ஸ்மிருதி இரானி,‌ கடந்த சில ஆண்டுகளாகவே மகளிருக்கு சேலைகள், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் வழங்கி வந்தார். இதற்கிடையே, உத்தரப் பிரதேச பொறுப்பாளராக்கப்பட்ட ராகுலின் சகோதரி பிரியங்காவும் அமேதியில் தீவிர பரப்புரை செய்தார். மேலும், ராகுலுக்கு ஸ்மிருதி இரானி கடும் போட்டி தருவாரா என செய்தியாளர்கள் பிரியங்காவிடம் கேட்டபோது, ஸ்மிருதி இரானி என்பவர் யார்? எனத் திருப்பிக் கேட்டதும் சர்ச்சையானது. 

வயதான வாக்காளர்கள் பாரம்பரிய வழக்கமாக ராகுல் காந்திக்கு வாக்களித்தாலும், வாரிசு அரசியலில் மட்டுமே நம்பிக்கையில்லாத இளைஞர்கள், பெண்கள், புதிய வாக்காளர்கள் ஸ்மிருதி இரானிக்கு ஆதரவளித்ததே அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com