மோடி, ஜெய்ராம் ரமேஷ்
மோடி, ஜெய்ராம் ரமேஷ்twitter page

பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகள்... பிரதமர் மோடிக்கு எதிராக 9 கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்!

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து நடப்பு ஆண்டுடன், 9 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து அவருக்கு எதிராக 9 கேள்விகளை எழுப்பி இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அவற்றை காணலாம்...

1. பொருளாதாரம்:

“பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரிப்பது ஏன்? பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவதும், ஏழைகள் மேலும் ஏழைகளாவதும் ஏன்? பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ள நிலையிலும் பொதுச் சொத்துக்கள் உங்கள் நண்பர்களுக்கு விற்கப்படுவது ஏன்?

2. விவசாயம் மற்றும் விவசாயிகள்:

விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட மூன்று சட்டங்கள் ரத்து செய்யப்பட்டபோதும், விவசாயிகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் மதிக்கப்படவில்லை? கடந்த 3 ஆண்டுகளாக விவசாயிகளின் வருமானம் ஏன் இரட்டிப்பாகவில்லை?

3. ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயேகம்:

மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து எல்ஐசிலும், எஸ்பிஐ வங்கியிலும் சேமித்த பணத்தை உங்கள் நண்பர் அதானி பலனடையும் நோக்கில் கொடுத்து மக்களை நெருக்கடியில் தள்ளியது ஏன்? திருடர்களை தப்பிக்க விட்டது ஏன்? பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் தலைவிரித்தாடும் நிலையில் நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்? இந்தியர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவது ஏன்?

4. சீனா மற்றும் தேசப் பாதுகாப்பு:

கடந்த 2020ல் சீனாவுக்கு நீங்கள் நற்சான்றிதழ் கொடுத்த பிறகும் அவர்கள், அவர்கள் இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமிப்பது ஏன்? சீனாவுடன் 18 பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளபோதிலும், அவர்கள் ஆக்ரோஷத்துடன் செயல்படுவது ஏன்?

5. சமூக நல்லிணக்கம்:

தேர்தல் ஆதாயங்களுக்காக ஏன் வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது? மக்களை ஏன் அச்சத்தின் பிடியிலேயே வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

6. சமூக நீதி:

பெண்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழப்படும்போது நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்? ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கையைப் புறக்கணிப்பது ஏன்?

7. ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி:

கடந்த 9 ஆண்டுகளில் நமது அரசியலமைப்பு சாசன மதிப்பீடுகளையும் மற்றும் ஜனநாயக அமைப்புகளையும் பலவீனப்படுத்தியது ஏன்? எதிர்க்கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராகவும் பழிவாங்கும் அரசியலை மேற்கொள்வது ஏன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் அப்பட்டமான பண பலத்தை பயன்படுத்துவது ஏன்?

8. நலத்திட்டங்கள்:

ஏழைகள் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான திட்டங்கள், அவர்களின் வரவு செலவுத் திட்டங்களைக் குறைத்து, கட்டுப்பாடு விதிகளை உருவாக்குவதன் மூலம் பலவீனப்படுத்தப்படுவது ஏன்?

9. கோவிட்-19:

கொரோனா தொற்றில் நாடு முழுவதும் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்க மறுத்தது ஏன்? அதற்கு மாறாக, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத அளவுக்கு திடீரென லாக்டவுனை அறிவித்தது ஏன்?”

- ஆகிய 9 கேள்விகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. இவையாவும் டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷால் வெளியிடப்பட்ட 'ஒன்பது ஆண்டுகள், ஒன்பது கேள்விகள்' (9 Saal, 9 Sawaal) புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன. இந்த 9 கேள்விகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும், அமைதி காக்கக் கூடாது என்றும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com