பஞ்சாப்பில் மோதல், டெல்லியில் நட்பு; காய் நகர்த்தும் கெஜ்ரிவால்! AAP - காங். கூட்டணியில் நடப்பதென்ன?

டெல்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
ராகுல், அரவிந்த் கெஜ்ரிவால்
ராகுல், அரவிந்த் கெஜ்ரிவால்ட்விட்டர்

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சமரசம் ஏற்படாத நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட முடிவுசெய்துள்ளது. அதேசமயத்தில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தில் மோதல்; மற்றொரு மாநிலத்தில் நட்பு என இரண்டு கட்சிகளும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் நிலைபாடுகளைக் கொண்டுள்ளது ஏன் என்பதைப் பார்க்கலாம்.

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வலுவான நிலையில் உள்ளதாக அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள். சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் தலைவர்கள் மக்களவைத் தேர்தலிலும் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறது. மேலும் பல காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பஞ்சாப் அரசியலில் ஆம் ஆத்மி கட்சியுடன் நேரடி மோதல் என்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கக் கூடாது எனக் கருதுகிறார்கள். ஆகவேதான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதி ஆகியவற்றில் இரண்டு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட முடிவுசெய்துள்ளன. பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிரோன்மணி அகாலி தளம் பஞ்சாப் மாநிலத்தில் வலுவாக இல்லாதது மற்றும் கூட்டணி அமைக்காதது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

அதேசமயத்தில் டெல்லி மாநிலத்தில் சூழ்நிலை வேறு மாதிரியாக உள்ளது. கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் உள்ள அனைத்து 7 தொகுதிகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மற்றும் டெல்லி மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, தொடர்ச்சியாக இரண்டு மக்களவைத் தேர்தல்களில் 1 இடத்தைக்கூடக் கைப்பற்ற முடியவில்லை.

இந்த முறையும் பாஜக டெல்லி மாநிலத்தில் வலுவாக உள்ளதாகக் கருதப்படும் சூழலில், ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முன்வந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியை மட்டுமே ஒதுக்க முடியும் எனவும் மீதமுள்ள 6 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியே களம் காணும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒருகட்டத்தில் டெல்லியில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் மாநிலத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது பேச்சுவார்த்தைக்கான கதவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விருந்தில், அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கேயுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாடினார். பின்னர் டெல்லியில் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடரும் எனவும் ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

பஞ்சாப் மற்றும் டெல்லியில் வெவ்வேறான நிலைப்பாடுகள் இருந்து வரும் நிலையில், ஹரியானா மற்றும் குஜராத், கோவா ஆகிய மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்காக காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குஜராத் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்திருந்தாலும், பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இன்னும் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் இதுவரை பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் காங்கிரஸ் கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளது எனவும் அந்த கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் I-N-D-I-A கூட்டணி அமைத்துள்ள போதிலும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தனித்தே போட்டியிட்டது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு செய்வதில் கராறாக இருந்துவருகின்றன. திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்க மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு இல்லை என வலியுறுத்தியுள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சி உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக இல்லை என தெரிவித்து குறிப்பிட்ட அளவு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com