மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியா ? ஒப்பந்தம் என்ன ?
மகாராஷ்டிரா மாநிலத்தில் நீண்ட இழுபறிக்கு பின் புதிய ஆட்சி அமைய உள்ளது.
சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசும் காங்கிரசும் ஒப்புக்கொண்டுள்ளன. எதிரும்புதிருமாக போட்டியிட்ட இக்கட்சிகள் தற்போது கைகோத்துள்ள நிலையில் இதன் பின்னணி என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.
மகாராஷ்டிராவில் சுழற்சி முறையில் தங்களுக்கு முதல்வர் பதவி வழங்க முடியாது என பாரதிய ஜனதா கூறியவுடன் அடுத்தகட்ட நகர்வுகளை அதிரடியாக தொடங்கிவிட்டது சிவசேனா. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா தலைவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கிய நிலையில் அதில் முதல்வர் பதவி யாருக்கு என்ற அம்சத்தில் உடன்பாடு எட்டப்படாததால் தேக்கநிலை ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியமைத்த பின்பும் இம்மூன்று கட்சிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அரியணையை நோக்கி நகர்ந்துள்ளன.
வியாழனன்று 3 கட்சிகளின் 2-ம் கட்ட தலைவர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை முடிவில் யார் யாருக்கு எவ்வளவு அமைச்சர் பதவிகள் என்பது குறித்து முடிவாகியுள்ளதாக தெரிகிறது. சிவசேனாவுக்கு 16, தேசியவாத காங்கிரசுக்கு 14, காங்கிரசுக்கு 12 அமைச்சர் பதவிகளை ஒதுக்க இப்பேச்சுவார்த்தையில் முடிவாகியுள்ளதாக தெரிகிறது. சட்டப்பேரவை சபாநாயகர் பதவி காங்கிரசுக்கும் துணை சபாநாயகர் பதவி சிவசேனாவுக்கும் செல்லும் எனத் தெரிகிறது.
இதே போல சட்ட மேலவை சபாநாயகர் பதவி தேசியவாத காங்கிரசுக்கும் துணை சபாநாயகர் பதவி சிவசேனாவுக்கும் கிடைக்கும் எனத் தெரிகிறது. மேலும் 40 அம்சங்கள் கொண்ட குறைந்தபட்ச வரைவு செயல்திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் பிரச்னைகளுக்கு தீர்வு, சிறுபான்மையினர் நலன், வேலைவாய்ப்பு உருவாக்கம் என பல்வேறு அம்சங்கள் குறைந்த பட்ச வரைவு செயல் திட்டத்தில் இடம் பெற்றள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரம் மிக முக்கியமான முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி யாருக்கு..? இதில் சுழற்சி முறை இருக்குமா என்ற அதிமுக்கிய கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. முதல்வர், துணை முதல்வர் பதவிகள், குறைந்தபட்ச வரைவு செயல்திட்டம் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் தங்களுக்குள் நேரில் கலந்து பேசி வரும் 19-ஆம் தேதி இறுதி முடிவை அறிவிக்க உள்ளார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன