சென்னையில் ஹவாலா; பெண் தலைமையில் 'தாக்குதல்' - மலேசிய நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம்!

சென்னையில் ஹவாலா; பெண் தலைமையில் 'தாக்குதல்' - மலேசிய நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம்!
சென்னையில் ஹவாலா; பெண் தலைமையில் 'தாக்குதல்' - மலேசிய நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம்!

இந்தியாவில் தாக்குதல் நடத்த ரோஹிங்கியா இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு சதி திட்டம் தீட்டியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ரோஹிங்கியா இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, இந்தியாவின் அயோத்யா, புத்த கயா, ஸ்ரீநகர், பஞ்சாப் போன்ற இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டு வருகிறது என்றும், மியன்மாரில் பயிற்சி பெற்ற ஒரு பெண்ணின் தலைமையில் வரும் வாரங்களில் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் நேற்று முன்தினம் வெளியான செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தத் தாக்குதல் திட்டத்தில் சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு உள்ளது என்றும், தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ள ஹவாலா பணப்பரிமாற்றம் சென்னையைச் சேர்ந்த ஒரு நபர் மூலமாக நடந்திருக்கிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

மேலும், இந்தத் தகவலை அறிந்த இந்திய உளவுத்துறை டெல்லி, ஹரியானா, உ.பி., பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களின் காவல்துறை மற்றும் மாநில புலனாய்வுப் பிரிவுகளை கண்காணிப்பை விரைவுபடுத்துமாறு வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் எச்சரித்தது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இந்தச் தாக்குதலுக்காக வங்கதேசம் வழியாக ஒரு குழு இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளது என்றும் விவரித்திருந்தது அந்தச் செய்தி. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், மலேசிய நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது.

இதுதொடர்பாக மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசும்போது, "மலேசியாவில் இத்தகைய சதி திட்டம் தீட்டப்படுவதாக வெளியான செய்தி உண்மைதானா? இதுதொடர்பாக மலேசிய காவல்துறைக்கு எந்த தகவலும் வரவுமில்லை. அவர்களுக்கு இதைப் பற்றி தெரியவுமில்லை.

ரோஹிங்கியா அமைப்புக்கும், ஜாகிர் நாயக்கிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை மலேசிய அரசு விளக்க வேண்டும். இது மிக முக்கியமான விவகாரம். இதில் ஜாகிர் நாயக்கின் பங்கு இருக்கிறதா என தெரிய வேண்டும். இந்த விவகாரத்தை மலேசிய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதா? ஜாகிர் நாயக்கை நாடு கடத்த கேட்கும் இந்தியாவின் கோரிக்கை மீது அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?" என்பது தொடர்பான கேள்விகளை முன்வைத்தார்.

இதற்கு பதில் கொடுத்த மலேசிய உள்துறை அமைச்சர் ஹம்சா, "இந்தத் தாக்குதல் திட்டம் தொடர்பாக எந்தத் தகவலும் மலேசிய காவல்துறைக்கு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு மலேசிய அரசின் ஒத்துழைப்பை இந்தியா இதுவரை கேட்கவில்லை. ஒருவேளை இந்தியா உதவி கேட்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் வழங்கப்படும். அதேநேரத்தில், தாக்குதல் தொடர்பான அறிக்கை கிடைத்த பின் அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தார். மலேசிய நாடாளுமன்றத்தில் நடந்த இந்த விவாதம் இரு நாடுகளுக்கும் இடையே தற்போது ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com