ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் உரிய நீதியை வழங்கும்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
Published on

ப.சிதம்பரம் தொடர்ந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவது கவலையாக உள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நிதியை பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு உதவியதாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் அக்டோபர் 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் டெல்லியிலுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி திகார் சிறையிலுள்ள ப.சிதம்பரத்தை இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் சந்தித்தனர். 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “தொடர்ந்து ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவது கவலையாக உள்ளது. ஏனென்றால் நம்முடைய அரசாங்க முறையில் எந்த முடிவையும் ஒரே நபர் எடுத்துவிட முடியாது. எல்லா முடிவுகளும் அனைவரிடமும் ஆலோசித்த பிறகே எடுக்கப்படுகிறது. மேலும் இந்த முடிவுகள் கோப்புகளிலும் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரைத்த முடிவிற்கு அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார். இந்த முடிவை பரிந்துரைத்த அதிகாரிகள் தவறு செய்யவில்லை என்றால் முடிவை அனுமதித்த அமைச்சர் மட்டுமே எவ்வாறு தவறு செய்திருப்பார். அத்துடன் அவர் தவறு செய்ததாக எவ்வாறு கருத முடியும்? ஒரு முடிவை அனுமதித்தற்கு அமைச்சர் மட்டும் காரணம் என்றால் மொத்த அரசாங்க முறையும் சரிந்துவிடும். ஆகவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தகுந்த நீதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com