"மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசினார்" - திமுக எம்பி ஆ.ராசா மீது டெல்லி போலீஸில் புகார்!

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது டெல்லி காவல் துறையில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் புகார் அளித்துள்ளார்.
ஆ.ராசா
ஆ.ராசாபுதிய தலைமுறை

குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கண்டித்து நேற்று (செப்டம்பர் 6) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், ”சனாதனமும், விஸ்வகர்மா யோஜனாவும் வெவ்வேறு அல்ல. எனக்கு என்ன விந்தையாக இருக்கிறதென்றால், உதயநிதி ஸ்டாலின் மென்மையாகத்தான் சொன்னார். ’சனாதனத்தை மலேரியா, டெங்கு போல ஒழிக்க வேண்டும்’ என்று பேசினார்.

மலேரியாவையும், டெங்குவையும் சமூகம் அருவருப்பாகப் பார்க்காது. அருவருப்பாகப் பார்க்கும்படி சனாதனத்தைச் சொல்லவேண்டும் என்றால், ஒருகாலத்தில் தொழுநோய் இருந்தது. பிறகு எச்.ஐ.வி இருந்தது. சனாதனம் என்பதை தொழுநோயைப்போல, எச்.ஐ.வியைப்போல சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் பார்க்க வேண்டும்.

’சனாதன தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்’ என பிரதமர் சொல்கிறார். அவர் கடைப்பிடித்திருந்தால் இத்தனை வெளிநாடுகளுக்குப் போயிருக்கக் கூடாது.

நேற்று நான் பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சவால் விட்டேன். சனாதனம் பற்றி விவாதம் நடத்துங்கள். எங்கள் தலைவரின் அனுமதியோடு சொல்கிறேன். 10 லட்சம் பேரை, 1 கோடி பேரை டெல்லியில் திரட்டுங்கள். உங்கள் அத்தனை சங்கராச்சாரியார்களையும் மேடையில் உட்கார வையுங்கள்.

உங்கள் எல்லா ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள். வில், அம்பு, கத்தி, கொடுவாள் எல்லாவற்றையும் நிற்க வையுங்கள். நான் வெறும் பெரியார், அம்பேத்கர் புத்தகங்களோடு வருகிறேன்” எனப் பேசியிருந்தார்.

ஏற்கெனவே சனாதனத்தை டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், சனாதனம் என்பதைத் தொழுநோயைப் போல, எச்.ஐ.வியைப்போல சமூக அவலம் நிறைந்த நோயாகத்தான் பார்க்க வேண்டும் என திமுக எம்.பி. ஆ.ராசா பேசியிருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக திமுக எம்.பி. ஆ.ராசா மீது டெல்லி காவல் துறையில் வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் புகார் அளித்துள்ளார். இதே வழக்கறிஞர்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் சனாதனம் குறித்துப் பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி போலீசில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com