”உண்டியலை உடைத்ததாக எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள்” - இருளர் இனமக்கள் புகார்

”உண்டியலை உடைத்ததாக எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள்” - இருளர் இனமக்கள் புகார்
”உண்டியலை உடைத்ததாக எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள்” - இருளர் இனமக்கள் புகார்

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணைய்நல்லூர் வட்டம் சித்தலிங்கமடம் நீதிபதி சந்துரு குடியிருப்பைச் சேர்ந்த பழங்குடி இருளர்களான ராமச்சந்திரன், பாண்டியன், குமார் ஆகிய மூவரையும் கடத்திச்சென்று கோயில் உண்டியலை உடைத்ததாக பொய்வழக்கு போட்டுள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க இருளர் இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அன்று ஆந்திர மாநிலம் , சித்தூர் மாவட்டத்திலிருந்து , விழுப்புரம் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 16 பேர் மற்றும் 15 குழந்தைகளுடன் ஆந்திரா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து கொத்தடிமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் . இதுபோன்று 15.09.2018 ல் ஈரோடு மாவட்டத்திலிருந்து மீட்கப்பட்ட விஜி- கமலா தம்பதியினர் , 29.03.2019 இல் தேனி மாவட்டத்திலிருந்து குமார் - இந்திரா , தம்பதியினரும் , கரூர் மாவட்டதிலிருந்து மீட்கப்பட்ட செல்வம் - ஆனந்தி தம்பதியினரும் மேற்படி சித்தலிங்கமடம் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குடியிருப்பில் தங்கியுள்ளனர் .

இதில் இராமச்சந்திரன் - ஜோதி - ஆராயி தம்பதியினர் பண்ருட்டி அருகில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கடந்த மூன்று மாதங்களாக வேலை செய்து வருகின்றனர். சித்தலிங்கமடம் அருகில் உள்ள ஆராமேடு கிராமத்தில் உள்ள முருகன் செங்கல் சூளையில் பாண்டியன் - கன்னிகா , குமார் இந்திரா தம்பதியினர் வேலை செய்துவருகின்றனர் . ஆந்திராவில் இருந்து மீட்கப்பட்டவர்களில் கணேசன் என்பவரின் ஆதார் அட்டை , குடும்ப அட்டை , வங்கிக்கணக்கு ஆகியவை விழுப்புரத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அவற்றை விரைவில் சமர்ப்பித்து நிவாரணம் பெறவேண்டி தன்னார்வலர் முத்துக்கண்ணு என்பவரும் மேற்படி தொழிலாளர் கண்காணிப்பாளரும் , பாண்டியனிடம் கூறியிருக்கிறார்கள் .

இதனையொட்டி கடந்த சனிக்கிழமை 26.02.2022 அன்று இராமச்சந்திரன் தம்பதியினர் சந்துரு குடியிருப்பிற்கு வந்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை 01.03.2022 அன்று பிற்பகல் செங்கல் சூளையில் வேலையில்லாததால் பாண்டியன் இராமச்சந்திரனோடு கணேசனைத் தேடி தங்களது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர். பாண்டியன், துணைக்கு தன்னுடைய சொந்த மைத்துனரான மேற்படி குமாரை அழைத்துக்கொண்டார். அப்போது பிற்பகல் 3 மணி இருக்கும். அன்று இரவு சுமார் 2.45 மணிக்கு மேற்படி பாண்டியனிடமிருந்து கமலா செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது . " மயிலம் போலீஸ்காரங்க எங்களை புடிச்சி வைச்சிருக்காங்க " என்று பாண்டியன் கூறியுள்ளார் . தொடர்ந்து தொடர்பு துண்டித்துள்ளது . இதனைத் தொடர்ந்து மேற்படி கன்னிகா இந்திரா போலீஸ் பாதுகாப்பிற்கு வந்துவிட்டனர் .

பத்திரிக்கை செய்திப்படி அவர்கள் விடியற்காலை 4 மணி அளவில் கூட்டேரிப்பட்டு மாரியம்மன் கோவிலில் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் திருட்டில் ஈடுபட்ட 7 பேரில் நான்கு பேர் கார்த்தி , சங்கர் , விஜி செல்வம் ஆகியோர் தப்பி ஓடிவிட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. நால்வரும்அன்று இரவு ஆராமேடு செங்கல் சூளையில் செங்கற்களை புரட்டிப்போடும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அதிலிருந்து தொடர்ந்து இன்று மதியம் வரை மேற்படி செங்கல் சூளையில்தான் வேலைபார்த்திருக்கிறார்கள். இந்த நிலையில், கூட்டேரிப்பட்டில் உள்ள ஒரு கோவிலில் 60 கி.மீ. தொலைவில் இருந்துவந்து திருட முடியுமா என அவர்கள் உறவினர்கள் கேள்வி எழுப்பினார்.

காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை நலிந்த பிரிவு விளிம்புநிலை மக்களான இருளர்கள் மீது சுமத்தப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது. மேலும் " ஜெய்பீம் " திரைப்படம் வெளியானதிலிருந்து காவல் துறையில் உள்ள சில அதிகாரிகள் இருளர்மீது ஒருவித வன்மத்தோடு பழிவாங்கும் வகையில் செயல்பட்டுவருகிறார்கள் என்பதையே இது வெளிப்படுத்துகிறது என்கிறார் பேராசிரியர் கல்விமணி. மேலும் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மீது இதுவரை இந்த வழக்கு இல்லை என்றும் காவல்துறை தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com