‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா?’ - வலுக்கும் எதிர்ப்பு
கல்லூரியில் தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க தலையில் அட்டைப்பெட்டி மாட்டப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ஹவேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்கவும், பிறரை பார்த்து எழுதுவதை தடுக்கவும் நூதன முயற்சி ஒன்று எடுக்கப்பட்டது. அதன்படி, மாணவர்களின் தலையில் காலியான அட்டைப்பெட்டி ஒன்று ஹெல்மெட் போல் அணிவிக்கப்பட்டது. இது காண்பதற்கு குதிரைக்கு சேனை கட்டியிருப்பது போல தோன்றியது.
தலையில் அட்டைப்பெட்டி அணிந்தபடி மாணவர்கள் தேர்வு எழுதிய புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது. காப்பி அடிப்பதை தடுக்க இப்படியொரு முறையா என வியப்பாக பார்த்தனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக டிபிஐ-யின் துணை இயக்குநர் சார்பில் கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார், “இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்களை விலங்குகள் போன்று நடத்தும் உரிமையை யாருக்கும் கிடையாது. இந்த முறையற்ற செயலுக்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.