சம்பளம் கிடைக்காததால் ரூ.200 கூலிக்கு ஆடுமேய்க்கும் கல்லூரி விரிவுரையாளர்!

சம்பளம் கிடைக்காததால் ரூ.200 கூலிக்கு ஆடுமேய்க்கும் கல்லூரி விரிவுரையாளர்!
சம்பளம் கிடைக்காததால் ரூ.200 கூலிக்கு ஆடுமேய்க்கும் கல்லூரி விரிவுரையாளர்!

கொரோனாவால் பலர் வேலையிழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றனர். வேலையிழப்பால் பெரிய வேலைகளிலிருந்தவர்களும் உணவுக்கே வழியில்லாமல் சிறுசிறு தொழில்களில் இறங்கியுள்ளனர். அந்த வரிசையில் கர்நாடகாவைச் சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் தினக்கூலிக்கு ஆடு மேய்க்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எரணகவுடா ஹலிகுதா. அரசியல் அறிவியல் பிரிவில் எம்.ஏ மற்றும் பி.எட் படித்துள்ள இவர் கே.எஸ்.இ.டி மற்றும் கே.டி.இ.டி போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் ராய்ச்சூர் மாவட்டத்தின் மாஸ்கி பகுதியிலுள்ள தேவனம்பிரியா அரசு முதல்நிலை கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக தற்காலிக விரிவுரையாளராகவே வெறும் ரூ. 13 ஆயிரம் சம்பளத்திற்கு வேலைபார்த்து வந்திருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்திலிருந்து அந்த சம்பளமும் அவருக்குக் கிடைக்காமல் போயிருக்கிறது. மனைவி மற்றும் 3 குழந்தைகள் உட்பட 9 பேர்கொண்ட அவரது குடும்பத்தில் இவர் மட்டுமே வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். எந்த வருமானமும் இல்லாத காரணத்தால், சேமிப்புத் தொகை மற்றும் தெரிந்தவர்களிடம் கடன்வாங்கி தனது குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். எரணகவுடாவின் மனைவி ஹனுமதி பஞ்சு ஆலையில் தினசரி கூலி ரூ.150க்கு வேலை செய்து வருகிறார். இதற்கு நடுவே தனது தாயாருக்கு கண் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பாடம் எடுப்பதைத் தவிர வேறு வேலை தெரியாத எரணகவுடாவிற்கு ஆடு மேய்க்கும் தொழில் செய்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லாமல்போகவே, தனது உறவினரின் ஆட்டுமந்தையை மேய்க்க ஒத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி, காலை 9 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை தினமும் ஆடுகளை மேய்த்தால் இவருக்கு கூலியாக ரூ.200 கிடைக்கிறது.

இதுகுறித்து, "எனக்கு குடும்பத்தை நடத்தவும், தாயாரின் மருத்துவ செலவுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனவேதான் ஆடுமேய்க்க வந்தேன். மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான சம்பளத்தை அரசு செலுத்தும் எனக் கூறியுள்ளனர். என்னுடன் தற்காலிக விரிவுரையாளர்களாக வேலை பார்த்துவந்த 30 பேரும் தற்போது விவசாயம் மற்றும் கட்டுமான வேலைகளுக்குச் சென்றுள்ளனர். எங்களைப் போன்றவர்களுக்கு அரசாங்கம் விரைவில் சம்பளத்தைக் கொடுத்தால் உதவியாக இருக்கும்’’ என்கிறார் எரணகவுடா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com