முதல் பட்ஜெட்டிலேயே மேகதாது அணை கட்டுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் சித்தராமையா!

மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை-சித்தராமையா
மேகதாது அணை-சித்தராமையாFile Image

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அம்மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக பட்ஜெட்டில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

அப்போது, “மேகதாது அணை கட்ட தேவையான ஒப்புதல் விரைவில் பெறப்படும்; மேகதாது அணை கட்ட ஏற்கனவே முதல் திட்ட அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற கர்நாடக அரசு மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளது; இந்த மனுக்கள் மீது ஒப்புதல் பெற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இந்த அணை கட்ட தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியை கர்நாடக அரசு முதன்மையான பணியாக கருத்தில் கொண்டு செயல்படுத்தும்; நிலம் கையகப்படுத்தும் பணியின்போது பொதுமக்களுக்கு இழப்பீடாக வேறு பகுதிகளில் நிலம் கொடுக்க நிலங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை
மேகதாது அணை

மேகதாது அணை கட்ட தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் பொறுப்பேற்ற முதல் பட்ஜெட்டிலேயே மேகதாது அணை கட்டுவது பற்றி அறிவிப்பை முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com