
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
பாலிவுட் இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில், அதா சர்மா, சித்தி இட்னானி நடித்த 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் மே 5ல் நாடு முழுதும் வெளியானது. 'லவ் ஜிகாத்' கதைக் களத்தின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று கட்டாய மதமாற்றம் செய்து பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்படுவதாக ட்ரெய்லரில் கூறப்பட்டு இருந்தது. இதனால், வெளியாவதற்கு முன்பே இப்படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால், படம் அறிவித்தபடி வெளியானது. இதனால் தி கேரளா ஸ்டோரி படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது. இப்படத்துக்கு எதிராக கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன.
தமிழ்நாட்டில் உளவுத் துறை எச்சரிக்கையை மீறி மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் படம் வெளியானது. இருப்பினும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை தடை செய்வதாக அம்மாநில மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்த்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் ஒரு தரப்பினரை இழிவுப்படுத்தியது. தற்போது ‘தி கேரளா ஸ்டோரி’ திரிக்கப்பட்ட கதையாக வெளியாகியிருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் பாஜக தான் நிதியுதவி செய்துள்ளது. மேற்கு வங்காளத்தையும் அவதூறு செய்கிறார்கள். 'வங்காளத்தை காப்பாற்றுங்கள்' என்று ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை பார்த்தேன். மேற்கு வங்கம் அமைதியான மற்றும் அமைதியை விரும்பும் மாநிலம். பாஜக ஏன் வகுப்புவாத அரசியலை உருவாக்குகிறது?" என்று கூறினார்.
இதனிடையே இன்று டெல்லியில் தி கேரளா ஸ்டோரி படத்தைப் பார்த்த பிறகு பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ''படத்தைத் தடை செய்வதன் மூலம் மேற்குவங்க அரசு பெரும் தவறு செய்துவிட்டது. உண்மையைப் பேச அனுமதிக்க வேண்டாமா? பயங்கரவாத அமைப்புகளுடன் நிற்பதால் உங்களுக்கு (மம்தா பானர்ஜி) என்ன நன்மை?" என்றார்.