மீண்டும் சீல் வைக்கப்பட்ட கர்நாடக முதல்வர் அலுவலகம் : தனிமைப்படுத்திக்கொண்ட எடியூரப்பா
முதல்வர் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனிமைப்படுத்திக்கொண்டார்.
கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் ஓட்டுநர் உட்பட ஊழியர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விதான் சவுதாவில் உள்ள தலைமைச்செயலக ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் நலமுடன் இருக்கிறேன். யாரும் பீதியடைய தேவையில்லை. அலுவலகத்தில் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் நான் வீட்டில் இருந்து சிறிது நாட்கள் பணி செய்ய முடிவு செய்துள்ளேன். ஊழியர்களுக்கு தேவையான வழிமுறைகளை வழங்க வீடியோ கால் மூலம் எனது கடமையை நிறைவேற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடியூரப்பாவின் செயலாளர் ரேணுகாச்சார்யா கூறுகையில், “முதலமைச்சர் நலமுடன் இருக்கிறார். எந்தப் பிரச்னையும் இல்லை. எனினும் சில நாட்கள் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே சுகாதாரத்துறை அதிகாரிகள் முதல்வர் அலுவலகத்தை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தினர். மேலும் மீண்டும் ஒருமுறை முதல்வர் அலுவலகம் சீலிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் தேதி ஏற்கெனவே முதலமைச்சர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அப்போது 2 போலீஸ் அதிகாரிகள், எலெக்ட்ரீஷியன் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் முதல்வர் தனது கூட்டங்களை விதான் சவுதாவில் உள்ள மாநில செயலக அறைக்கு மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.