9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் 3 மொழிகள் கட்டாயம்.. CBSE அதிரடி!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF) 2023 ஆகியவற்றின் பரிந்துரைகளின்படி, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'மூன்றாவது மொழி' படிப்பதை மற்றும் அதில் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
மாணவர்கள் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளில் மொத்தம் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும். இந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். இந்தப் புதிய விதிமுறை 2026-27 கல்வி ஆண்டில் 9ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கும், அவர்கள் 2027-28 கல்வி ஆண்டில் 10ஆம் வகுப்புக்குச் செல்லும்போதும் பொருந்தும். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியைப் பொதுத் தேர்வாக இல்லாமல், பள்ளி அளவிலான அகமதிப்பீட்டுத் தேர்வாக எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும்.
அடுத்த கல்வியாண்டு முதல், 10-ஆம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழைப் பெற மூன்றாவது மொழிக்கான பள்ளி அளவிலான தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். மூன்றாம் மொழிக்கான தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும். ஒன்பதாம் வகுப்பில் மூன்றாம் மொழிக்கான பள்ளி அளவிலான தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், 10-ஆம் வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால் அவர்கள், அதே கல்வி ஆண்டில் மறுதேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்பதாம் வகுப்புக்கு மூன்றாம் மொழி தேர்ச்சி விதி நடப்புக் கல்வி ஆண்டு முதலே அமலாகிறது. அதேபோல், 2026-27 கல்வி ஆண்டில் 6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த மூன்றாவது மொழி முறை முழுமையாக அமல்படுத்தப்படும். அவர்கள் வருங்காலத்தில் 10ஆம் வகுப்புக்கு வரும்போது, இந்த மூன்றாவது மொழிக்கு CBSE வாரிய பொதுத்தேர்வு (எழுத வேண்டியிருக்கும் என வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

