டெல்லி: கோடீஸ்வரர் வீட்டில் சினிமா பாணியில் போலி ரெய்டு! சிக்கிய கும்பலும் வெளியான பின்னணி தகவலும்!

சினிமா பாணியில் போலி வருமானவரித் துறை சோதனையில் ஈடுபட்ட கும்பல் ஒன்று போலீசில் சிக்கியுள்ளது.
income tax ride
income tax ridefreepik

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம், 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த திரைப்படத்தில், சூர்யா தலைமையிலான குழு ஒன்று, பணக்காரர்களைக் குறிவைத்து அவர்களுடைய வீட்டில் போலியான வருமானவரி சோதனை நடத்திப் பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருக்கும். இதேபோன்ற ஒரு சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

income tax ride
income tax ridefreepik

டெல்லி ஜனக்புரி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் குல்ஜித் சிங். பெரும் கோடீஸ்வரரான இவரது வீட்டில் ரூ.400 முதல் ரூ.500 கோடி இருப்பதாக வருமானவரித் துறையில் ஊழியராகப் பணியாற்றும் தீபக் காஷ்யப் என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், தீபக் காஷ்யப் தனது நண்பரான தலைமைக் காவலர் குல்தீப் சிங் மற்றும் ஹிமான்ஷு, ரவீந்தர், ஷம்பு சர்மா ஆகியோருடன் இணைந்து, குல்ஜித் சிங் வீட்டில் போலி வருமானவரிச் சோதனை நடத்தி பெரும் தொகையைச் சுருட்ட திட்டம் தீட்டினார். அதன்படி, ஒரு பெண் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் வருமானவரித் துறை அதிகாரிகள்போல தொழிலதிபர் குல்ஜித் சிங் வீட்டுக்குள் புகுந்தது. ஆனால் அந்த மோசடி கும்பலுக்கு பணம் கிடைக்கவில்லை. மாறாக அவர்கள் போலீசில் சிக்கிக்கொண்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் குல்ஜித் சிங் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது போலியான வருமான வரி சோதனை நடத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தொழிலதிபரின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மோசடி கும்பலை அடையாளம் கண்ட போலீசார் போலீஸ் ஏட்டு குல்தீப் சிங், வருமான வரித்துறை ஊழியர் தீபக் காஷ்யப் உள்பட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள ஒரு பெண் உள்பட 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

income tax ride
income tax ridefreepik

இதுகுறித்து காவல் துறையினர், “குல்ஜித் சிங் வீட்டில் இருக்கும்போது சோதனை நடத்த வேண்டும். அப்போதுதான் அவரை மிரட்டி ரூ.10 முதல் ரூ.15 கோடி சுருட்ட முடியும் என்பது மோசடி கும்பலின் திட்டம். ஆனால் அவர்கள் சென்ற நேரத்தில் குல்ஜித் சிங் வீட்டில் இல்லை. இதையடுத்து, போலியாகச் சோதனை நடத்தியதில் எதுவும் கிடைக்காததால் அந்த மோசடிக் கும்பல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. ரெய்டுக்கு சற்று முன்பு, குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவர், ’ரெய்டுகள் உண்மையானதாகத் தோன்றும் வகையில் ஒரு பெண்ணை தங்கள் திட்டத்தில் சேர்க்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். ’தங்கள் பக்கத்தில் ஒரு பெண் இருந்தால், அது சந்தேகத்தை வரவழைக்காது’ எனக் காரணம் கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com