திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ண தேவராயர் வழங்கிய நகைகள் எங்கே?
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கிருஷ்ண தேவராயர் வழங்கிய ஆபரணங்கள் எங்கே? என மத்திய தகவல் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில அரசு, திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்டோர் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பதி கோயிலை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்கக்கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பி.கே.ஸ்.ஆர். அய்யங்கார் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 16 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயர் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கு வழங்கிய தங்க, வைர ஆபரணங்கள் எங்கே? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதுதொடர்பாக, மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Read Also -> கேரளாவுக்கு உதவிய கேன்சர் பாதித்த பிச்சைக்காரர்!
விஜயநகர அரசர் கோயிலுக்கு ஆபரணங்கள் வழங்கியதாக கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அவ்வாறு ஆபரணங்கள் வழங்கப்படவில்லை என 2011ஆம் ஆண்டு ஐதராபாத்தில் உள தொல்லியல் மற்றும் அருங்காட்சிய இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டள்ளது. மேலும், இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிலும், 1952ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டு வரும் கோயிலில் திருவாபரணம் பதிவு புத்தகத்தில், கிருஷ்ணதேவராயரிடம் நகை பெற்றதற்கான எந்த விவரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பதி கோயிலுக்கு கிருஷ்ணதேவராயர் வழங்கிய ஆபரணங்கள் எங்கே? என விளக்கம் அளிக்க தொல்லியல் ஆய்வு, கலாச்சாரத்துறை, ஆந்திர மாநில அரசு மற்றும் திருப்பதி தேவஸ்தானமும் நோட்டீஸ் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.