வங்கி மோசடியாளர்கள் விவரங்களை வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
வங்கி மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுங்கள் என பிரதமர் அலுவலகத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன்களை வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாதவர்களின் பெயர் விவரங்களை வங்கிகள் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வங்கிகள் எதுவும் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சந்தீப் சிங் என்பவர் மத்திய தகவல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு, 66 பக்கங்கள் கொண்ட முழுமையான உத்தரவைப் பிறப்பித்தார். அதில் வங்கி மோசடியாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்திற்கும், மத்திய தகவல் ஆணையத்திற்கும் கண்டிப்புடன் கூறியுள்ளார். மேலும் வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய தார்மீக கடமை, அரசியல் சாசன கடமை மற்றும் அரசியல் ரீதியிலான கடமை, பிரதமர் அலுவலகத்திற்கு உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.