குரங்குகளின் தொல்லையை தடுத்த ’சீனப் பாம்புகள்’! கேரள காவல்துறையின் நூதன டெக்னிக்!

குரங்குகளின் தொல்லையை தடுத்த ’சீனப் பாம்புகள்’! கேரள காவல்துறையின் நூதன டெக்னிக்!
குரங்குகளின் தொல்லையை தடுத்த ’சீனப் பாம்புகள்’! கேரள காவல்துறையின் நூதன டெக்னிக்!

கேரளாவில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஒரு காவல் நிலையத்தில் அதிகரித்து வந்த குரங்குகளின் தொல்லையை “சீனப் பாம்புகளைப்” பயன்படுத்தி காவல்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள நெடும்கண்டத்தில் அமைந்துள்ளது கும்பம்மெட்டு காவல் நிலையம். கேரள - தமிழ்நாடு எல்லையில் வனப்பகுதியை ஒட்டி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்திற்கு பெரும் தொல்லையாக இருந்து வந்தவை “குரங்குகள்”. காட்டில் இருந்து வழி தவறி இந்த காவல்நிலையத்திற்கு படையெடுத்த குரங்குகள் தங்களுக்கே உரிய சேட்டைகளை நிகழ்த்தி காவலர்களுக்கு தொல்லை கொடுத்துள்ளன.

அந்தக் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் பல முயற்சிகளைச் செய்து இந்த குரங்கு படையெடுப்பை தடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதன்பின் குரங்குகளின் தொல்லை மேலும் அதிகரிக்கவே சோர்ந்து போய்விட்டனர் காவலர்கள். அப்போது தெருவிலங்குகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் எஸ்டேட் பராமரிப்பாளர் ஒருவர் குரங்குகளை விரட்ட ஒரு யோசனையை சொல்லியுள்ளார். சந்தேகத்துடன் காவலர்கள் அதை செய்துபார்த்த போது அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. அந்த யோசனையை செய்தபின்னர் ஒரு குரங்கு கூட அங்கு வரவில்லையாம்., அப்படி என்ன செய்தார்கள்?

“குரங்குகள் பொதுவாக பாம்புகளின் வழித்தடத்தை தவிர்க்கும். பாம்புகளுக்கு பயப்படும் என்பதால் பாம்பு வடிவத்தில் இருக்கும் பொம்மை பாம்புகளை காவல்நிலையத்தை சுற்றிலும் வைத்துவிட்டால், குரங்குகள் வராது” என்று யோசனை தெரிவித்துள்ளார் அந்த எஸ்டேட் பராமரிப்பாளர். அவரது யோசனை உண்மையிலே பயன்படுமா என்று காவலர்களுக்கு சந்தேகம் இருந்த போதிலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகளை காவல்நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் வைத்துள்ளனர். மரங்கள், ஜன்னல்கள் உட்பட காவல்நிலையத்தையே பொம்மை பாம்புகளால் நிறைத்தனர்.

இதையடுத்து குரங்குகள் படையெடுப்பு நின்றுவிட்டதாக கும்பம்மெட்டு காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் பி.கே.லால்பாய் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். “வழக்கமாக அதிக அளவில் குரங்குகள் வரும் இடங்களில் ரப்பர் பாம்புகளை கட்டி வைத்தால், இனி குரங்குகள் தொல்லை இருக்காது என சொன்னார்கள். அதன்படி நாங்கள் செய்தபின், தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை. ரப்பர் பாம்புகளை கட்டிய பிறகு ஸ்டேஷன் அருகே எங்கும் குரங்கு வரவில்லை” என்று பி.கே.லால்பாய் தெரிவித்தார்.

குரங்குகளின் தொல்லையை தடுக்கும் நடவடிக்கையால் ரப்பர் பாம்புகளின் நிலையமாகவே மாறிவிட்டது கும்பம்மெட்டு காவல் நிலையம். வனத்திற்கு அருகே இருக்கும் அந்த காவல்நிலையத்திற்கு உண்மையான பாம்பு ஒருவேளை வரும்போது, அது ரப்பர் பாம்பு என்று காவலர்கள் நினைத்துவிட்டால் என்ன ஆகும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com