இந்தியாவின் அருணாச்சல் எல்லையில் கிராமத்தையே உருவாக்கியுள்ள சீனா: அதிர்ச்சி படங்கள்

இந்தியாவின் அருணாச்சல் எல்லையில் கிராமத்தையே உருவாக்கியுள்ள சீனா: அதிர்ச்சி படங்கள்
இந்தியாவின் அருணாச்சல் எல்லையில் கிராமத்தையே உருவாக்கியுள்ள சீனா: அதிர்ச்சி படங்கள்

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே  நீண்டகாலமாக சர்ச்சைக்குள்ளான இடமாக உள்ள அருணாச்சல் பிரதேசத்தின் இந்திய எல்லையில் 101 வீடுகள் கொண்ட கிராமத்தை சீனா உருவாக்கியிருக்கிறது.

அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 101 வீடுகளைக் கொண்ட ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. என்.டி.டி.வி பிரத்யேகமாக வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களில் இது காட்டப்படுகிறது.

நவம்பர் 1, 2020 தேதியிட்ட அந்த படங்களை, பல வல்லுநர்கள் பகுப்பாய்வு செய்துள்ளனர். இது இந்திய எல்லைக்குள் சுமார் 4.5 கி.மீ தூரத்தில் அமைக்கப்பட்ட கட்டுமானம் என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள். இந்த பகுதி இந்திய பிரதேசமாக இருந்தாலும், அரசாங்க வரைபடங்களின்படி, இது 1959-ஆம் ஆண்டு முதல் சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும், இதற்கு முன்னர் ஒரு சீன இராணுவ மையம் மட்டுமே இருந்தது, ஆனால் இந்த முறை ஆயிரக்கணக்கானோர் வசிக்கக்கூடிய ஒரு முழு கிராமம் கட்டப்பட்டுள்ளது.

சாரி சூ ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கிராமம் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்தியா மற்றும் சீனாவால் நீண்டகாலமாக சர்ச்சைக்குள்ளான பகுதியாக உள்ளது. லடாக்கின் மேற்கு இமயமலையில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கிடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இமயமலையின் கிழக்கு எல்லையில் இந்த கிராமம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனா தனது இராணுவம் எத்தனை உயிரிழப்புகளை சந்தித்தது என்பதை பகிரங்கமாக கூறவில்லை.

சர்ச்சைக்குரிய இந்த கிராமத்தின் படம், நவம்பர் 1, 2020-இல் எடுக்கப்பட்டது. அதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக ஆகஸ்ட் 26, 2019 இல் எடுக்கப்பட்ட படத்தில் எந்த கட்டுமான நடவடிக்கைகளையும் காட்டவில்லை.

இதற்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சகம், "இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த சமீபத்திய அறிக்கைகளை நாங்கள் கண்டிருக்கிறோம். கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற பல உள்கட்டமைப்பு கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது."  எனத் தெரிவித்தது. மேலும் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட இந்திய எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தாங்களும் உறுதியாக இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com