லடாக் எல்லையில் 5ஜி நெட்வொர்க் அமைக்கும் சீனா?: உளவுத்துறை தகவல்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தொடர்ந்து எல்லை பிரச்னை நடந்துகொண்டு இருக்கும் இந்த நிலையில், சீனா ஃபைபர் ஆப்டிக்ஸ் கேபிள்களை இடுவதற்கும், 5ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கான பிற உபகரணங்களை நிறுவுவதற்கும், பாங்காங் ஏரியில் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி பிற கட்டமைப்புகளும் இதே பாங்காங் ஏரிக்கு அருகில்தான் சீனாவால் நடந்துகொண்டிருக்கின்றன.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் எல்.ஏ.சி யின் சர்ச்சைக்குரிய தளங்களில் ஒன்றான டெமொக் பகுதிக்கு அருகில் 5ஜிக்கான கட்டுமானத்திற்கு சீனா அனுமதி அளித்தது. புதிய ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளுக்கான உபகரணங்களை நிறுவுதல், ஃபைபர் ஒளியியல் கேபிள்களை இடுதல் மற்றும் செல்லுலார் டிரான்ஸ்மிஷன் போன்றவற்றை அமைத்து வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளன.
கடந்த மே மாத தொடக்கத்தில் இந்தியா-சீனா பதட்டங்கள் வெடித்தபோதுகூட இதே மாதிரி அமைக்கப்பட்டது.
பாங்காங் ஏரியில், சீனா விரல் 5 முதல் விரல் 8 வரை தங்களது நிலைகளை வலுப்படுத்தி உள்ளதால், இந்த நடவடிக்கையை இந்தியா மிகவும் கவனமாக கருத்தில் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சீனா இந்த அத்துமீறலில் இருந்து பின்வாங்க மறுத்ததால், எதிர்கால திட்டங்கள் பற்றி தீர்மானிக்க டெல்லியில் பல சுற்று விவாதங்கள் நடந்து வருகின்றன.
பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் இந்தியா ராணுவத்தை பயன்படுத்த வேண்டி இருக்கும் என்று பாதுகாப்பு தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, மேற்கு (லடாக்), மத்திய (உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம்) மற்றும் கிழக்கு (சிக்கிம், அருணாச்சல்) ஆகிய மூன்று பிரிவுகளில் சீனத் தரப்பிலிருந்து பட்டாளம், பீரங்கி மற்றும் கவசங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளதாக இந்தியாவிற்கு தகவல் கிடைத்துள்ளது எனவும் கூறப்படுகிறது. ஜூன் 15 அன்று, கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.