ஊரடங்கை நீட்டிப்பதா?:  மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஊரடங்கை நீட்டிப்பதா?: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ஊரடங்கை நீட்டிப்பதா?: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Published on

(கோப்பு புகைப்படம்)

ஊரடங்கை நீட்டிப்பதா என்பது தொடர்பாக பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவை பொருத்தவரை கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,761லிருந்து 7447 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 516 லிருந்து 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 40 உயிரிழப்புகளும், 1035 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 1,574 பேருக்கும், தமிழகத்தில் 911 பேருக்கும், டெல்லியில் 903 பேருக்கும், ராஜஸ்தானில் 553 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் 473, ஆந்திராவில் 363, கேரளாவில் 364, கர்நாடகாவில் 207 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகம் பாதிப்பு ஏற்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஏற்கெனவே பிரதமர் மோடி 2 முறை மாநில முதலமைச்சர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தியிருந்தார். அதாவது கடந்த மார்ச் 20 ஆம் தேதியும், ஏப்ரல் 2 ஆம் தேதியும் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் நோய் தொற்று குறித்தும், சிகிச்சை முறை குறித்தும், நிவாரணம் குறித்தும் முதலமைச்சர் பழனிசாமி, பிரதமரிடம் எடுத்துரைப்பார் எனத் தெரிகிற்து. இதுவரை மத்திய அரசு தரப்பில் முதலில் 510 கோடியும் நேற்று 314 கோடியும் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று அதிகம் பாதித்த நிலையில் தமிழகத்திற்கு இன்னும் நிறைய நிதி தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் பட்சத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதுகுறித்து இன்று மாலை தமிழகத்தில் நடைபெற உள்ள அமைச்சர்கள் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று நடைபெற்ற மருத்துவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமியிடம் மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com