முழு அதிகாரம் இல்லாததால் எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கைகளை... முதல்வர் ரங்கசாமி கவலை!

முழு அதிகாரம் இல்லாததால் எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கைகளை... முதல்வர் ரங்கசாமி கவலை!
முழு அதிகாரம் இல்லாததால் எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கைகளை... முதல்வர் ரங்கசாமி கவலை!

புதுச்சேரி முழுமையான அதிகாரம் உள்ள மாநிலம் அல்ல என்பதால் பேரவையில் எம்.எல்.ஏக்கள் கூறும் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது என முதல்வர் ரங்கசாமி கவலை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பதாக அந்த தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஏனாமில் நடைபெற்ற கலாச்சார விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ரங்கசாமி பேசியபோது...

எங்களது அரசை பொருத்தவரை மாநிலத்தின் எல்லா பகுதிகளும் வளரவேண்டும், ஒரே மாதிரியான சீரான வளர்ச்சியை காணவேண்டும் என்பது அரசின் எண்ணம். மத்திய அரசின் நிதியுதவியுடன் ஏனாமில் புதிய ஜிப்மர் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அது விரைவில் திறக்கப்படவுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் மணல் எடுக்கின்ற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் உள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் காக்க விரைவில் மணல் எடுக்க அனுமதி வழங்கப்படும். ஏனாமில் ஆயுஷ் மருத்துவமனை கட்டப்படவுள்ளது, நிதிநிலை நெருக்கடி இருந்தாலும் மக்களின் திட்டங்கள் அனைத்தையும் அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக முதியோர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்கியுள்ளோம், ஏனாம் தொகுதியில் புதிதாக 16,500 முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து உதவித்தொகைகளும் வழங்கப்பட உள்ளது,

மாணவர்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த இலவச மிதிவண்டிகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று பட்டியலிட்ட முதல்வர் ரங்கசாமி ஏனாம் பகுதி சிறப்பாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் எண்ணம். பாரபட்சமின்றி நாங்கள் செயல்படுத்திய திட்டங்களால் வளர்ந்துள்ளது. இப்போது இருக்கும் ஏனாம் எம்.எல்.ஏ-வின் கோரிக்கைகளை எங்கள் அரசு புறக்கணிக்கிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனாம் மக்களுக்காக எம்.எல்.ஏ கொண்டு வரும் திட்டங்களை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும்.

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக அதிக நிதியை பெற்று சிறந்த வளர்ச்சியை கொண்டு வர வேண்டும். சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும், வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணமாக உள்ளது. எமது அரசு மத்திய அரசிடமிருந்து அதிக நிதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது, சில குறைகள் இருக்கலாம், விரைவான செயல்பாடுகள் இல்லாமலும் இருந்திருக்கலாம் அதற்கு காரணம் முழுமையான அதிகாரம் உள்ள மாநிலம் புதுச்சேரி அல்ல என்பதையும், பேரவையில் எம்.எல்.ஏக்கள் கூறும் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்ற முடியாத நிலை உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இருப்பினும் மத்திய அரசின் உதவியோடு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஏனாமில் சூதாட்ட விடுதிகள் இருக்கக் கூடாது என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. எங்கள் அரசின் எண்ணம் புதுச்சேரி மாநிலத்தில் எந்த பகுதியிலும் சூதாட்ட விடுதிகள் இருக்கக்கூடாது என்பது தான் அரசின் எண்ணமாக உள்ளது. சூதாட்டம் எவ்வளவும் மோசமானது என்பது தெரியும். மகாபாரத கதை கூட சூதாட்டம் மோசமானது என்பதை விளக்கியுள்ளது.

அதனால் தற்போதைய எம்.எல்.ஏவின் கோரிக்கையின்படி சூதாட்ட விடுதிகள் நடத்த அனுமதிக்க மாட்டோம். சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று புதுச்சேரி மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com