தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு.. வழங்கிய முக்கியமான தீர்ப்புகள் என்ன?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் இன்றுடன் (மே 13) நிறைவடைந்ததை அடுத்து, தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதன்மூலம் நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் 20 ஆண்டுகால பணிக்காலம் முடிவுக்கு வருகிறது. அவர் முதன்முதலில் 2005ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து, நிரந்தர நீதிபதியானார். 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்டு, கடந்த நவம்பரில் தலைமை நீதிபதியானார். உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில், நீதிபதி கன்னா பல முக்கிய தீர்ப்புகளில் ஒரு பகுதியாக இருந்தார். தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தில் முக்கிய தீர்ப்பளித்தவர். அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய அமர்வில் உறுப்பினராக இருந்தவர். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை அனுமதிக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த அரசியலமைப்பு பெஞ்சில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்குவதை உறுதி செய்த அரசியலமைப்பு பெஞ்சில் அவர் ஒரு பகுதியாக இருந்தார். டெல்லி மதுக் கொள்கை வழக்கில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அவர் தலைமையிலான பெஞ்ச், அப்போது டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இவரது அமர்வு, மேற்கு வங்கத்தில் மோசடி செய்து வேலைக்குச் சேர்ந்ததாக கூறப்பட்ட வழக்கில் 25 ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டன.
தனது பிரிவுரையின் போது பேசிய நீதிபதி சஞ்சீவ் கன்னா, ”நான் பேச முடியாமல் தவிக்கிறேன். எனக்குள் நிறைய நினைவுகள் உள்ளன. நீதித்துறை வைத்திருக்கும் பொதுமக்களின் நம்பிக்கையை கட்டளையிட முடியாது. அதைப் பெற வேண்டும். நீதித்துறை என்பது பெஞ்ச் மற்றும் பார் கிளப்பைக் குறிக்கும் ஒரு பொதுவான சொல். பார் கிளப் என்பது மனசாட்சியைக் காப்பவர். உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் வெவ்வேறு பின்னணியிலிருந்து வருகிறார்கள். நீதிபதி பி.ஆர்.கவாய் தனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவர், உங்களுக்கு ஒரு சிறந்த தலைமை நீதிபதி இருப்பார். அவர் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை நிலைநிறுத்துவார்” எனத் தெரிவித்தார்.
நீதிபதி சஞ்சீவ் கன்னா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி பி.ஆர்.கவாய் நாளை பதவியேற்கிறார்.