“மத்திய அரசின் தவறுதான் யெஸ் வங்கி பிரச்னைக்கு காரணம்” - ப. சிதம்பரம்
நிதி சார்ந்த அமைப்புகளை மத்திய அரசு தவறாக நிர்வகித்து வருவதுதான் யெஸ் வங்கி போன்றவை சந்தித்து வரும் சிக்கல்களுக்கு காரணம் என ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது யெஸ் வங்கி. இந்த வங்கி சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வாராக் கடனால் பாதிக்கப்பட்டுள்ளது. யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரஷாந்த் குமார், யெஸ் வங்கியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே நேற்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கியின் நலன் காக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே, அந்நிறுவன நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். இவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், அவர்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இது குறித்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், யெஸ் வங்கி பிரச்னை குறித்து ரிசர்வ் வங்கி விரிவான விசாரணை செய்து, தவறு செய்தவரை பொறுப்பாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியின் 49 சதவிகிதப் பங்குகளை பொதுத்துறை வங்கியான SBI 2 ஆயிரத்து 450 கோடி ரூபாயை செலவழித்து வாங்கும் என கூறியுள்ளது வினோதமான நடவடிக்கை என்றும் மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் யெஸ் வங்கி பிரச்னை வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.